பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்


பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 21 Jun 2017 10:30 PM GMT (Updated: 2017-06-22T01:25:00+05:30)

பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு அரசு, கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி 1998–ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2017–2018–ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை ஜூன் 7–ந் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், மிருதங்கம் மற்றும் வயலின் ஆகிய பிரிவுகளில் 3 ஆண்டுகள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பள்ளியில் படிக்க 12 வயது முதல் 25 வயது வரை உள்ள மாணவ–மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி கட்டணம் ஆண்டுக்கு ரூ.152

நாதஸ்வரம், தவில் மற்றும் தேவாரம் பிரிவுகளில் தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. இதர பாடப்பிரிவுகளில் சேருவதற்கு 7–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இசைப்பள்ளியில் சேரும் மாணவ–மாணவிகளுக்கு தனித்தனியே அரசு விடுதி வசதி உண்டு. மாணவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.400 வழங்கப்படுகிறது. சீருடை, காலணிகள் மற்றும் சைக்கிள் மாணவர்களுக்கு அரசு இலவசமாக வழங்குகிறது. அரசு பஸ்களில் கட்டணமின்றி பயண சலுகை பெறலாம். பயிற்சி கட்டணம் ஆண்டுக்கு ரூ.152 ஆகும். பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும். இப்பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள், பெரம்பலூர் விளாமுத்தூர் ரோட்டில் உள்ள அரசு இசைப்பள்ளிக்கு வந்து விவரங்களை கேட்டு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story