சர்வதேச யோகா தினத்தை விவசாயிகளின் குழந்தைகளுடன் பட்னாவிஸ் கொண்டாடினார்


சர்வதேச யோகா தினத்தை விவசாயிகளின் குழந்தைகளுடன் பட்னாவிஸ் கொண்டாடினார்
x
தினத்தந்தி 21 Jun 2017 11:00 PM GMT (Updated: 21 Jun 2017 8:59 PM GMT)

சர்வதேச யோகா தினத்தை விவசாயிகளின் குழந்தைகளுடன் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கொண்டாடினார்.

மும்பை,

சர்வதேச யோகா தினத்தை விவசாயிகளின் குழந்தைகளுடன் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கொண்டாடினார்.

யோகா தினம்

சர்வதேச யோகா தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மும்பை ஒர்லியில் விவசாயிகளின் குழந்தைகளுடன் யோகா தினத்தை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கொண்டாடினார். இதையொட்டி, மாநிலம் முழுவதும் இருந்து பழங்குடியின பகுதிகளை சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்த 600 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அவர்களுடன் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அமர்ந்து யோகா செய்தார். இதில், அவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ், பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. மங்கல் பிரபாத், இந்தி நடிகர் ஜாக்கி சுரோப், தொழில் அதிபர் வல்லாப் பன்சாலி, சமூக சேவகர் சாந்திலால் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு யோகா செய்தனர்.

மோடி வெற்றி

நிகழ்ச்சியில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசும்போது, ‘‘யோகா உடற்பயிற்சியின் வடிவம் மட்டும் அல்ல, அது வாழும் கலை. இயற்கையின் சக்தியை மனித சக்தியாக மாற்றும் வல்லமை யோகாவுக்கு உண்டு. யோகாவுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைப்பதில் பிரதமர் மோடி வெற்றி பெற்றார். யோகாவின் பண்பை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, பாந்திராவில் பா.ஜனதா எம்.பி. பூணம் மகாஜன் ஏற்பாடு செய்திருந்த யோகா நிகழ்ச்சியிலும், முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ஆசிஷ் ஷெலார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

மகிழ்ச்சி

முன்னதாக முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘யோகா தினத்தை 176 நாடுகள் கொண்டாடுவது நமக்கு மகத்தான திருப்தியையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. பிரதமர் மோடி விளக்கிய யோகாவின் உடல்நலம் சார்ந்த நன்மையை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டன. மக்களுக்கு நல்ல உடல்நலன் அளிக்கும் கருவியாக யோகா திகழும் என நான் நம்புகிறேன்’’ என்றார்.

இதேபோல், மாநில தலைமை செயலகத்தில் வேளாண் துறை மந்திரி சதபாவு கோட் தலைமையில் நடைபெற்ற யோகா பயிற்சியில் அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.


Next Story