விமான நிலையத்தில் பழைய ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு பணத்துடன் தொழில் அதிபர் சிக்கினார்


விமான நிலையத்தில் பழைய ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு பணத்துடன் தொழில் அதிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 21 Jun 2017 9:12 PM GMT (Updated: 21 Jun 2017 9:12 PM GMT)

மும்பை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணத்துடன் தொழில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணத்துடன் தொழில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.21 ஆயிரத்து 500-க்கான பழைய ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

வெளிநாட்டு பணம்


மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றுமுன்தினம் துபாய் செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக பயணிகள் வந்து கொண்டிருந்தனர். பயணிகளின் உடைமைகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இந்த சோதனையின் போது, ஒரு பயணியின் பையில் வெளிநாட்டு பணம் மற்றும் தடை செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

தொழில் அதிபர் கைது

அதில் 5 ஆயிரம் பவுண்ட்ஸ், 20 ஆயிரம் சவுதி ரியால், 300 யு.எஸ்.டி., 1,700 ஏ.இ.டி. உள்ளிட்ட வெளிநாட்டு பணமும், ரூ.21 ஆயிரத்து 500-க்கான பழைய நோட்டுகளும் இருந்தன. இதையடுத்து அந்த பயணி அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின்னர், விசாரணைக்காக அவர் சகார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்த தொழில் அதிபர் என்பது தெரியவந்தது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை அவர் ஏன் கடத்த முயன்றார்? என்பதை கண்டறிய போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story