நெல்லையில் ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் தங்க நகைகள் திருட்டு


நெல்லையில் ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் தங்க நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 22 Jun 2017 8:30 PM GMT (Updated: 2017-06-22T23:23:51+05:30)

மாநகராட்சி ஊழியர்கள் போல் நடித்து நெல்லையில் உள்ள ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் தங்க நகைகளை மர்ம மனிதர்கள் திருடிச் சென்று விட்டனர்.

நெல்லை,

மாநகராட்சி ஊழியர்கள் போல் நடித்து நெல்லையில் உள்ள ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் தங்க நகைகளை மர்ம மனிதர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர்

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் காமாட்சி அம்மன் கோவில் 1–வது தெருவில் வசித்து வருபவர் ஞானசுந்தரம்(வயது 65). இவர் மதுரை அரசு கலைக்கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

நேற்று முன்தினம் ஞானசுந்தரம் தனது மகனுடன் வெளியில் சென்று விட்டார். இவருடைய மனைவி மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது மர்ம மனிதர்கள் 5 பேர், ஞானசுந்தரத்தின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் ஞானசுந்தரத்தின் மனைவியிடம், நாங்கள் அனைவரும் மாநகராட்சி ஊழியர்கள், இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் வருகிறது. இது குறித்து ஒவ்வொரு வீடுகளையும் பார்த்து ஆய்வு செய்து வருகிறோம். உங்கள் வீட்டையும் ஆய்வு செய்ய வந்துள்ளோம் என்று கூறி வீட்டின் உள்ளே சென்றுள்ளனர்.

20 பவுன் தங்க நகைகள் திருட்டு

அவர்களில் 3 பேர், பாதாள சாக்கடை அமைய உள்ள இடத்தை பார்வையிட வேண்டும் என்று கூறி ஞானசுந்தரத்தின் மனைவியை வீட்டின் பின்புறம் உள்ள பகுதிக்கு அழைத்து சென்று பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது 2 பேர் மட்டும் வீட்டின் உள்ளே சென்று அங்குள்ள அறைக்குள் நுழைந்து உள்ளனர்.

அந்த அறையில் வைத்து இருந்த 20 பவுன் தங்க நகைகளை திருடிக்கொண்டு சென்று விட்டனர். அவர்கள் இருவரும் நகைகளை திருடிச்சென்ற சிறிது நேரம் கழித்து வீட்டின் பின்பகுதியில் ஞானசுந்தரத்தின் மனைவியிடம் பேசிக்கொண்டு இருந்த 3 பேரும் அங்கிருந்து நைசாக நழுவிச்சென்று விட்டனர்.

நகைகளை காணாமல் அதிர்ச்சி

இந்த சம்பவம் நடந்து முடிந்த சிறிது நேரம் கழித்து வெளியில் சென்று இருந்த ஞானசுந்தரமும், அவரது மகனும் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அவர்களிடம் ஞானசுந்தரத்தின் மனைவி நடந்த சம்பவத்தை தெரிவித்தார். அதை கேட்ட ஞானசுந்தரத்திற்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் வீட்டின் உள்ளே உள்ள அறைக்கு சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த நகைகள் சரியாக உள்ளனவா? என்று பார்த்துள்ளார்.

அப்போது அங்கு இருந்த 20 பவுன் தங்க நகைகளை காணாதது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். ஞானசுந்தரம் வெளியில் சென்று விட்டதை தெரிந்து கொண்ட மர்ம மனிதர்கள், மாநகராட்சி ஊழியர்கள் என்ற போர்வையில் அவரது வீட்டுக்குள் நுழைந்து அவரது மனைவியை நைசாக ஏமாற்றி நகைகளை திருடிச் சென்று விட்டது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

இது குறித்து ஞானசுந்தரம் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. ஆனால் இந்த கொள்ளை சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story