அரசு இ–சேவை மையங்களில் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு பிழைகளை திருத்தம் செய்யலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


அரசு இ–சேவை மையங்களில் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு பிழைகளை திருத்தம் செய்யலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 22 Jun 2017 8:30 PM GMT (Updated: 22 Jun 2017 5:57 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் புதிய ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு கேட்டல், பெயர் திருத்தம் மற்றும் பல்வேறு திருத்தங்களுக்கும்

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் புதிய ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு கேட்டல், பெயர் திருத்தம் மற்றும் பல்வேறு திருத்தங்களுக்கும் தாசில்தார் அலுவலகத்தில் இயங்கி வரும் அரசு கேபிள் டி.வி. இ–சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

‘ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள்

நெல்லை மாவட்டத்தில் தற்போது 8 லட்சத்து 41 ஆயிரத்து 741 ரே‌ஷன் கார்டுகள் உள்ளன. இதில் 4 லட்சத்து 76 ஆயிரத்து 876 ரே‌ஷன் கார்டுகள், புதிய ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டாக மாற்றி வழங்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 3 லட்சத்து 64 ஆயிரத்து 865 ரே‌ஷன் கார்டுகளுக்கு, புதிய ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதிதாக வழங்கப்படும் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகளில் புதிய உறுப்பினர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம், குடும்பத்தலைவர் திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் தற்போது இணையதளம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இ–சேவை மையம்

தற்போது, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. இ–சேவை மையங்களில் புதிய ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு கோரி விண்ணப்பங்களை பதிவு செய்யவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் 15 தாலுகா அலுவலகங்களில் அரசு கேபிள் டி.வி. இ–சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் புதிய ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு விண்ணப்பித்து பெற ரூ.30 சேவை கட்டணமும், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு ரூ.60 சேவை கட்டணமும் செலுத்த வேண்டும்.

இவ்வாறு இ–சேவை மையத்தில் பதிவு செய்த பிறகு, புதிய ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகளை அச்சடித்து வந்த உடன் பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு வாரத்தில் கிடைக்கும்

இ–சேவை மையம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படுகிறதா? என்பதை கண்காணிக்க கலெக்டர் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் 2–வது தளத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் சிறப்பு கண்காணிப்பு மையம் அமைக்கப்படும்.

பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு தொடர்பாக தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதால், பணிகள் வேகமாக நடைபெறும். புதிய ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு ஒருவார காலத்தில் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு கிடைக்கும்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோட்டி, மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் சிவகுமார், தலைமை உதவியாளர் ஓசன்னா ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story