ஸ்ரீவைகுண்டம் அருகே பஸ்– கார் மோதல்; பெண் சாவு கணவர் உள்பட 3 பேர் படுகாயம்


ஸ்ரீவைகுண்டம் அருகே பஸ்– கார் மோதல்; பெண் சாவு கணவர் உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 22 Jun 2017 9:30 PM GMT (Updated: 2017-06-22T23:31:39+05:30)

ஸ்ரீவைகுண்டம் அருகே பஸ்– கார் மோதிய விபத்தில் பெண் பலியானார். கணவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஸ்ரீவைகுண்டம்,

ஸ்ரீவைகுண்டம் அருகே பஸ்– கார் மோதிய விபத்தில் பெண் பலியானார். கணவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பஸ்– கார் மோதல்

திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் சிங்காரவேலன் (வயது 65). இவர் நேற்று தன்னுடைய உறவினர்களுடன் 2 கார்களில் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தார். பின்னர் மாலையில் அனைவரும் 2 கார்களில் திருச்சிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். 2 கார்களும் அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தன.

ஸ்ரீவைகுண்டத்தை கடந்து பொன்னங்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது, பின்னால் வந்த காரும், எதிரே வந்த நெல்லை– திருச்செந்தூர் அரசு பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போன்று நொறுங்கியது.

பெண் பலி

காரில் இருந்த சிங்காரவேலன், அவருடைய மனைவி மாலதி தேவி (52), உறவினரான சிவகுமார் மகள் மனோரஞ்சினி (23), காரை ஓட்டிச் சென்ற தணிகை அரசு மகன் கோகுல் சுகுமார் (18) ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாலதி தேவி பரிதாபமாக உயிரிழந்தார்.

3 பேர் படுகாயம்

படுகாயம் அடைந்த சிங்கார வேலன், கோகுல் சுகுமார், மனோரஞ்சினி ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story