சென்னையில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறை


சென்னையில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறை
x
தினத்தந்தி 22 Jun 2017 9:30 PM GMT (Updated: 2017-06-23T00:25:00+05:30)

சென்னையில் உள்ள உயர் சிகிச்சைக்கான பல்நோக்கு மருத்துவ மனையில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் போதிய அளவில் இல்லை.

சென்னை,

சென்னையில் உள்ள உயர் சிகிச்சைக்கான பல்நோக்கு மருத்துவ மனையில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் போதிய அளவில் இல்லை. இதனால் உரிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

பல்நோக்கு மருத்துவமனை

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உயர் சிகிச்சைக்கான பல்நோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பிரமாண்டமான கட்டிடத்தில் செயல்பட்டுவரும் இங்கு நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புற்றுநோய், மூளையில் கட்டி, முதுகு தண்டுவட ஆபரேஷன் போன்ற பல்வேறு சிக்கலான பிரச்சினைகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக, இங்கு நவீன மருத்துவ உபகரணங்கள் உள்ளன. பல்வேறு துறைகளின் மருத்துவ நிபுணர்களும் பணியில் உள்ளனர். பல்நோக்கு மருத்துவ மனையில் அனைத்து வார்டுகளிலும் ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு நோய் தொற்று ஏற்படக்கூடாது, நவீன மருத்துவ உபகரணங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது போன்ற காரணங்களுக்காகவே முழுமையான ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளது.

மூச்சுத்திணறல்

அத்தனை வசதிகளும் கொண்ட இங்கு, ஏ.சி. எந்திரம் கடந்த 2 மாதமாக முழுமையாக செயல்படவில்லை. இதனால் கட்டிடத்துக்குள் வெளிக்காற்று வருவதற்கான வாய்ப்பு இல்லை. ஏ.சி. முழுமையாக செயல்படாததால் அதிக வியர்வை ஏற்படுவதுடன் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகளை நோயாளிகள் தினசரி சந்தித்து வருகின்றனர்.

குறைந்த மின் அழுத்தம் காரணமாக மாலை 6 மணிக்கு மேல் மருத்துவமனையில் உள்ள பெரும்பாலான மின் விளக்குகள் அணைக்கப்பட்டு விடுகின்றன. இதனால் மருத்துவமனை வளாகம் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு ஊசி போடுவது போன்ற மருத்துவ பணிகளை நர்சுகள் மேற்கொள்ளும் நிலை உள்ளது.

இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டபோது அனைத்து துறைகளிலும் போதுமான சிறப்பு மருத்துவ நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனால் உரிய சிகிச்சை கிடைக்காமல் இங்கு சேரும் நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. டாக்டர்கள் குறிப்பிட்ட நேரம் வரை பணியில் இருப்பது இல்லை என்றும், பல நேரங்களில் நோயாளிகளுக்கு நர்சுகளே சிகிச்சை அளிப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

நடவடிக்கை தேவை

‘ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது ஏழை மக்களுக்கும் உயர்தர சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த மருத்துவமனையை தொடங்கினார். அவர் இருந்தவரை இந்த மருத்துவமனை மிக சிறப்பான முறையில் செயல்பட்டு வந்தது. அவர் இறந்த பின்பு அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. இந்த மருத்துவமனை சிறப்பாக செயல்பட தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்’ என்று பல்நோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

Next Story