ஊத்துக்கோட்டை அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா


ஊத்துக்கோட்டை அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 22 Jun 2017 9:30 PM GMT (Updated: 2017-06-23T00:39:01+05:30)

ஊத்துக்கோட்டை அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சீதஞ்சேரியில் இருந்த மதுக்கடையை கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த மார்ச் மாதம் அதிகாரிகள் அகற்றினர். இந்த கடையை அருகே உள்ள அம்மம்பாக்கம் கிராம எல்லையில் அமைக்க பூர்வாங்க பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அம்மம்பாக்கம், சீதஞ்சேரி கிராம பொதுமக்கள் நேற்று புதிதாக அமைய உள்ள மதுக்கடை எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டத்திற்கு முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ராகவன், பூண்டி ஒன்றிய தி.மு.க. துணைச்செயலாளர் நாகராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

சமரச பேச்சுவார்த்தை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப்– இன்ஸ்பெக்டர்கள் மணிமனோகரன், பரிமளம், பபி ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடையை திறக்க மாட்டோம் என்ற உறுதி அளித்தால் தர்ணா போராட்டத்தை கைவிட தயாராக இருக்கிறோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இது குறித்து ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபாஉஷாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

கடையை தற்காலிகமாக திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி அளித்தார். இது குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்ததன் பேரில் தர்ணா போராட்த்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story