வர்த்தக நிறுவனங்களில் வணிகவரி அதிகாரிகள் சோதனைக்கு எதிர்ப்பு


வர்த்தக நிறுவனங்களில் வணிகவரி அதிகாரிகள் சோதனைக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 22 Jun 2017 10:00 PM GMT (Updated: 22 Jun 2017 9:45 PM GMT)

வர்த்தக நிறுவனங்களில் வணிகவரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் சோதனைக்கு வணிகர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, இந்த சோதனைகளை ஆகஸ்டு மாதம் வரை நிறுத்தி வைக்க தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மதுரை,

நாடு முழுவதும் வருகிற 1-ந் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வர உள்ளது. இதனால் பொதுமக்கள் அன்றாடம் உபயோகிக்கும் அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் கடுமையாக விலை உயர வாய்ப்புள்ளது. மத்திய பா.ஜ.க. அரசின் இந்த திட்டத்துக்கு தமிழக அரசும் ஒப்புதல் கொடுத்துள்ளது.

அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள வர்த்தகர்கள் தங்களது தொழில் சார்ந்த நடைமுறைகளை ஜி.எஸ். டி.க்கு ஏற்ப மாற்றம் செய்து வருகின்றனர். அதேபோல, இருப்பில் உள்ள சரக்குகளை இந்த மாத இறுதிக்குள் விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், வணிக நிறுவனங்களில் தமிழக வணிகவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்ப்பு

இந்த சோதனைக்கு வணிகர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதிப்புக்கூட்டு வரி உள்பட பல்வேறு மறைமுக வரிகளை உள்ளடக்கி ஜி.எஸ்.டி. என்ற ஒரே வரியாக வசூலிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே மேற்கொள்ள முடியும். இந்த புதிய வரித்திட்டத்துக்கு மாறுவதற்கான அடிப்படை பணிகளில் வணிகர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.இதற்காக இருப்பு சரக்குகளை சரிபார்த்து உள்ளட்டு வரி வரவு செய்து கொள்ள முடியாத சரக்குகளை உடனடியாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த வரிவிதிப்பால் தேவையற்றதாக மாறும் தங்களது நிறுவனத்தின் கிளைகளை மூடவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆகஸ்டு வரை...

இந்த நிலையில், வணிகவரித்துறை அதிகாரிகள் வர்த்தக நிறுவனங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் போது, பல ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கு விபரங்களை கேட்கின்றனர். ஆனால், இந்த கணக்கு விபரங்களை சரிபார்க்க பலநாட்கள் ஆகிவிடும். முறையாக வணிக வரி செலுத்தும் நிறுவனங்களில் இதுபோன்ற சோதனைகள் தேவையற்றது.

எனவே, வணிக வரி அதிகாரிகள் தங்களது சோதனையை வருகிற ஆகஸ்டு மாதம் வரை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story