மாவட்ட செய்திகள்

சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்ற கன்றுக்குட்டிகளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததால் கலவரம் - தடியடி + "||" + Cattle carrying cargo trucks Handed over to the police station Riots - Batons

சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்ற கன்றுக்குட்டிகளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததால் கலவரம் - தடியடி

சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்ற கன்றுக்குட்டிகளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததால் கலவரம் - தடியடி
சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்ற கன்றுக்குட்டிகளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததால் பழனியில் கலவரம் ஏற்பட்டது.
பழனி,

சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்ற கன்றுக்குட்டிகளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததால் பழனியில் கலவரம் ஏற்பட்டது. அரசு பஸ் மீது கல்வீசி தாக்கப்பட்டது. 5 பேர் படுகாயம் அடைந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.


கோவை மாவட்டம் பொள்ளாச்சி தேவனூர்புதூரை சேர்ந்தவர் செந்தில் (வயது 35). விவசாயி. இவர், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு வந்தார். அங்கு 7 கன்றுக்குட்டிகளை அவர் விலைக்கு வாங்கினார். பின்னர் அவைகளை, ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் மாவட்டம் பழனி வழியாக பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டார்.

இதேபோல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த மடாதிபதி சம்பத்குமார ஜீயர் சிவாச்சாரியார்களுடன், பொள்ளாச்சியில் நடக்கிற கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க ஒரு காரில் சென்று கொண்டிருந்தார். காருக்கு முன்னால், அந்த சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தில் கன்றுக்குட்டிகள் நெருக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை ஜீயர் பார்த்தார்.

பழனி அருகே பைபாஸ் சாலையில் அந்த வாகனம் சென்று கொண்டிருந்தபோது, அதனை ஜீயர் வழிமறித்தார். பின்னர் அவர், கன்றுக்குட்டிகளுடன் அந்த வாகனத்தை மடக்கிபிடித்து, பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுதொடர்பாக அவர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில், ஒரு சிறிய வாகனத்தில் 7 கன்றுக்குட்டிகளை நெருக்கமாக ஏற்றி செல்வது மனதுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது. இது, அவைகளை சித்ரவதை செய்வதை போன்றதாகும். கன்றுக் குட்டிகளுக்கு தேவையான தீவனம், தண்ணீர் எதுவும் வாகனத்தில் இல்லை. எனவே கன்றுக்குட்டிகளுக்கு தீவனம் கொடுத்து, பெரிய வாகனத்தில் ஏற்றி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

கன்றுக்குட்டிகளுடன் சரக்கு வாகனத்தை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் முஸ்லிம் அமைப்பினர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். இதற்கிடையே போலீஸ்நிலையத்தில் இருந்து ஜீயர் பொள்ளாச்சி நோக்கி தனது காரில் புறப்பட்டார்.

அப்போது, அங்கு திரண்டு நின்றவர்கள், அவரது காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் ஜீயர் மற்றும் அவருடன் வந்தவர்களை போலீஸ் நிலையத்துக்குள் போலீசார் அழைத்து சென்றனர். அவர்களை உள்ளே வைத்து, போலீஸ் நிலைய கதவை மூடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த இந்து அமைப்பினர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு வந்தனர். புதுதாராபுரம் சாலையில், 2 தரப்பை சேர்ந்தவர்களும் நின்று கொண்டு ஒருவருக்கொருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வாழ்க, ஒழிக கோஷங்களை எழுப்பியடி இருந்தனர். இதனால் அவர்களுக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.

இதைத்தொடர்ந்து இருதரப்பினரிடமும் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கட்ராமன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தார். அப்போது, ஜீயர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் சரக்கு வாகனத்தை பிடிக்கும் அதிகாரத்தை அவருக்கு கொடுத்தது யார்? என்றும், போலீஸ் நிலைய கதவை திறக்கக்கோரியும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, வேறு வாகனத்தில் கன்றுக்குட்டிகளை பொள்ளாச்சிக்கு அனுப்பி வைப்பதாகவும், யார் மீதும் வழக்குப்பதிவு செய்ய மாட்டோம் என்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கட்ராமன் கூறினார். இதற்கிடையே ஜீயர் போலீஸ் நிலையத்தில் இருந்து காரில் வெளியே வந்தார்.

இதனைக்கண்ட ஒரு தரப்பினர் கல்வீசி தாக்கினர். இதில், காருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. காரில் இருந்த ஜீயர் மற்றும் அவருடன் வந்தவர்களும் பாதிக்கப்படவில்லை. ஆனால் கார் அருகே நின்று கொண்டிருந்த சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் அசோக் (வயது 40) மீது ஒரு கல் விழுந்தது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

அவருடைய முகத்தில் ரத்தம் கொட்டியது. இதனால் திடீரென இருதரப்பினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. ஒருவரையொருவர் அடிக்க பாய்ந்தனர். சரமாரியாக கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனைக்கண்ட போலீசார் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தரப்பினரை விரட்டி விரட்டி அடித்தனர். அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அந்த பகுதி போர்க் களம் போல காட்சி அளித்தது. இதற்கிடையே போலீசார் ஒரு தரப்பினருக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி மற்றொரு தரப்பினர் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர்.

அவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஈரோடு நோக்கி சென்ற அரசு பஸ்சை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வீசி தாக்கினர். இதில், பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. மேலும் அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு தரப்பினரை அவர்கள் தாக்க முயன்றனர். இதனால் போலீசார் அவர்களையும் தடியடி நடத்தி கலைத்தனர்.

கல்வீச்சு தாக்குதலில் அசோக், எலக்ட்ரீசியன் செந்தில்குமார் (38) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். போலீசார் நடத்திய தடியடியில் கல்லூரி மாணவர் நவநீத கிருஷ்ணன் (20), மெக்கானிக் பொன் னுச்சாமி (42), கூலித்தொழிலாளி கோபிநாதன் (28) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கலவரம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன், போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆகியோர் பழனிக்கு சென்று விசாரணை நடத்தினர். பழனியில் இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவத்தால் பதற்றம் நிலவுகிறது. மீண்டும் கலவரம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், பழனி நகரில் போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சரக்குவாகனத்தில் ஏற்றி வந்த கன்றுக்குட்டிகளை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்தில் ஜீயர் ஒப்படைத்தார். இதனால் பழனியில் இருதரப்பினருக்கு இடையே கலவரம் மூண்டது. ஆனால் மீண்டும் அதேவாகனத்தில் பழனியில் இருந்து பொள்ளாச்சிக்கு நேற்று இரவு 7 கன்றுக்குட்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.