வேலை வாய்ப்பு வழங்கக்கோரி முற்றுகை போராட்டம்


வேலை வாய்ப்பு வழங்கக்கோரி முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 30 Jun 2017 5:13 AM IST (Updated: 30 Jun 2017 5:13 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக அமைய உள்ள அனல் மின்நிலையத்தில் வேலை வாய்ப்பு வழங்கக்கோரி முற்றுகை போராட்டம் நடந்தது.

மீஞ்சூர்

புதிதாக அமைய உள்ள அனல் மின்நிலையத்தில் வேலை வாய்ப்பு வழங்கக்கோரி முற்றுகை போராட்டம் நடந்தது.

மீஞ்சூரை அடுத்த வாயலூர் மற்றும் நெய்தவாயல் ஊராட்சிகள் அடங்கிய பகுதிகளில் தமிழக அரசின் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டது. இதில் 2 அலகுகளில் தலா 660 மெகாவாட் மின்உற்பத்தி செய்வதற்காக புதிதாக அனல் மின்நிலையம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. வாயலூர் ஊராட்சியில் அடங்கிய 7 கிராம மக்கள் தங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதையடுத்து பொன்னேரி வருவாய் ஆர்.டி.ஓ. அரவிந்தன் தலைமையில் நேற்று முன்தினம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

வேலை வாய்ப்புகள் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை கிராம மக்கள் வலியுறுத்தினர். கிராம குழு அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அப்போது 350 பேருக்கு வேலை வழங்க தனியார் நிறுவன அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) முடிவு தெரிவிப்பதாக அதிகாரிகள் கூறினர்.

இந்த நிலையில் நேற்று நெய்தவாயல் ஊராட்சியை சேர்ந்த தமிழ்கொரஞ்சூர் கிராமத்தை சார்ந்த 100–க்கும் மேற்பட்டோர் அனல்மின்நிலைய கட்டுமான பகுதியில் உள்ள அலுவகத்தின் நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் தமிழ்கொரஞ்சூர் கிராமத்தை சேர்ந்த வீரன், காசி, ஆகியோரிடம் அனல்மின்நிலைய ஒப்பந்த நிறுவன அதிகாரி பிரேம்குமார், மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராம குழுவில் உங்கள் கிராமத்தின் பெயரையும் இணைத்து கொண்டு வேலை வாய்ப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story