அரசு அதிகாரி வீட்டில் தங்கம், வைர நகைகள் திருட்டு


அரசு அதிகாரி வீட்டில் தங்கம், வைர நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 30 Jun 2017 5:14 AM IST (Updated: 30 Jun 2017 5:14 AM IST)
t-max-icont-min-icon

கொளத்தூர் அருகே அரசு அதிகாரி வீட்டில் 22 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் வைர கம்மல் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.

செங்குன்றம்,

கொளத்தூர் அருகே பட்டப்பகலில், அரசு அதிகாரி வீட்டில் கள்ளச்சாவி போட்டு 22 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் வைர கம்மல் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

சென்னையை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள ராஜமங்கலம் தாதாங்குப்பம் ராஜீவ்காந்தி நகர் 3–வது தெருவைச் சேர்ந்தவர் கணபதி (வயது 50). இவர், அரசு காப்பீட்டு நிறுவனத்தில் அதிகாரியாக இருந்து வருகிறார்.

இவருடைய மனைவி பாரதி (47). இவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகன் ரங்கேஷ்.

நேற்று முன்தினம் காலையில் வீட்டை பூட்டி விட்டு கணவன்–மனைவி இருவரும் தங்கள் மகனை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்க்க சென்று விட்டனர். இரவில் 3 பேரும் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்து இருந்த 22 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் மதிப்புள்ள வைர கம்மல் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போய் இருப்பது தெரிந்தது.

கள்ளச்சாவி போட்டு திறந்தனர்

கணபதி குடும்பத்துடன் வெளியே சென்று இருப்பதை தெரிந்து கொண்ட மர்மநபர்கள், பட்டப்பகலில் கள்ளச்சாவி போட்டு அவரது வீட்டை திறந்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த தங்கம் மற்றும் வைர நகைகள், வெள்ளி பொருட்களை திருடிச்சென்று இருப்பது தெரியவந்தது.

பீரோவின் மேல் அறையில் 30 பவுன் நகைகள் வைத்து இருந்தனர். அது மர்மநபர்களின் கண்ணில் படாததால் அவை தப்பியது. இதுபற்றி ராஜமங்கலம் போலீசில் கணபதி புகார் செய்தார்.

அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story