இளம்பிள்ளை அருகே சொத்து தகராறில் விசைத்தறி அதிபர் அடித்துக்கொலை
இளம்பிள்ளை அருகே சொத்து தகராறில் விசைத்தறி அதிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய அண்ணன் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இளம்பிள்ளை,
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள ராமாபுரம் காட்டுப்பிள்ளையார்கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 53), விசைத்தறி அதிபரான இவர் விவசாயமும் செய்து வந்தார். இவருடைய அண்ணன் விஜயன் இறந்து விட்டார். இவர்களுக்கு பூர்வீக சொத்தாக 4½ ஏக்கர் விவசாய நிலமும், 9 விசைத்தறிகளும் உள்ளன.
விஜயனின் மகன் குணசேகரன் இந்த விசைத்தறிகளை கவனித்து வந்தார். மேலும், சொத்தை பிரித்து தருமாறு சித்தப்பா கோபாலிடம் குணசேகரன் கேட்டு வந்தார். இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 3–ந் தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பு நடந்தது. இந்த சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் கோபால் தனது வீட்டின் முன்பு சுற்றுச்சுவர் கட்டும் பணியை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு குணசேகரன் (34), அவருடைய தாய் சாந்தாமணி, மனைவி பாரதி, தாத்தா குருசாமி (80), உறவினர்கள் ரகுநாதன் (28), ராஜி ஆகிய 6 பேர் வந்தனர். பின்னர் அவர்கள், சொத்தை பிரித்து கொடுப்பது தொடர்பாக பேசியதால் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறு முற்றவே 6 பேரும் சேர்ந்து கோபாலை தாக்கினர். மேலும் ஆத்திரமடைந்த குணசேகரன் இரும்புக்கம்பியால் கோபாலின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் கோபால் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை 6 பேரும் சேர்ந்து தூக்கி அவரது வீட்டின் அருகே இருந்த விசைத்தறி கூடத்தின் வாசலில் போட்டுவிட்டு ஓடி விட்டனர்.
இதை பார்த்த கோபாலின் மகன் கோகுல்ராஜி, மகள் மயூரி ஆகியோர் கதறி அழுதனர். சத்தம் கேட்டு அங்கு திரண்டு வந்த அக்கம்பக்கத்தினர், கோபாலை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோபால் இறந்து போனார்.
இந்த பயங்கர கொலை குறித்து தகவல் அறிந்ததும் மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாரணவீரன் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். கோபாலின் உடலை கைப்பற்றிய அவர்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும், கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து குணசேகரன், ரகுநாதன், குருசாமி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மற்ற 3 பேரையும் தேடி வருகிறார்கள். சொத்து தகராறில் விசைத்தறி அதிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.