மக்களின் எண்ணங்களை அறிந்து அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது


மக்களின் எண்ணங்களை அறிந்து அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது
x
தினத்தந்தி 1 July 2017 3:30 AM IST (Updated: 30 Jun 2017 11:09 PM IST)
t-max-icont-min-icon

மக்களின் எண்ணங்களை அறிந்து அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது என்று பரமக்குடியில் முத்தையா எம்.எல்.ஏ. பேசினார்.

பரமக்குடி,

பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் பரமக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கஞ்சியேந்தல் கிராமத்தில் ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல பி.புத்தூர் கிராமத்தில் ரூ.20 லட்சத்தில் தடுப்புச்சுவர் கட்டுதல், பிடாரிசேரி கிராமத்தில் ரூ.5 லட்சத்தில் அலங்கார கற்கள் பதித்தல், தேவனேரில் ரூ.5 லட்சத்தில் நிழற்குடை அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது. பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முத்தையா தலைமை தாங்கி திறந்து வைத்தார். யூனியன் ஆணையாளர் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் முத்தையா எம்.எல்.ஏ. பேசியதாவது:– ஜெயலலிதா மீது தமிழக மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்து அ.தி.மு.க. ஆட்சியை கொண்டுவந்துள்ளனர். அந்த நம்பிக்கை வீணாகாது. மக்களின் எண்ணங்களை அறிந்து அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. மக்களிடம் வீண் வதந்திகளை பரப்பி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கலாம் என தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஸ்டாலின் நினைக்கிறார். அது நடக்காது.

அ.தி.மு.க. மாபெரும் இயக்கம். தொண்டர்கள் நிறைந்த கட்சி. மக்கள் மனதில் பசும்மரத்துஆணி போல் பதிந்துள்ளது. இதை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து விடுவார்கள். மக்கள் பணியில் எவ்வித தொய்வும் இருக்காது. இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட துணை செயலாளர் பாதுஷா, ஒன்றிய செயலாளர் முத்தையா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் தங்கவேல், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தேவதாஸ், பாண்டிசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story