கோத்தகிரி அருகே கரடி தாக்கி கூலி தொழிலாளி படுகாயம்


கோத்தகிரி அருகே கரடி தாக்கி கூலி தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 1 July 2017 3:30 AM IST (Updated: 30 Jun 2017 11:35 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே கரடி தாக்கியதில் கூலி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே அரவேணு கிராமத்தில் இருந்து அளக்கரை செல்லும் சாலையில் உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 60) கூலித் தொழிலாளி. இவர் நேற்று காலை 6 மணியளவில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென அவர் மீது பாய்ந்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர், கரடியிடம் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.

அதற்குள் அந்த கரடி, சின்னத்தம்பியின் முகம் மற்றும் கையில் மாறி, மறி கடித்தது. இதில் நிலை குலைந்து போன அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் ஆக்ரோ‌ஷமாக காணப்பட்ட அந்த கரடியை அங்கிருந்து விரட்டியடித்தனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சின்னத்தம்பியை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு முகத்திலும், கையிலும் தலா 4 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன், வனக்காப்பாளர்கள் முருகன் மற்றும் வீரமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சின்னத்தம்பியை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கரடி தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சின்னத்தம்பிக்கு உரிய நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

1 More update

Next Story