அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை எம்.எல்.ஏ.வுக்கு குறுந்தகவல் அனுப்பிய மாணவி

ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று எம்.எல்.ஏ.வுக்கு மாணவி ஒருவர் குறுந்தகவல் அனுப்பியதால் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1500–க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும், மாணவிகள் சார்பிலும் அரசு அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் பள்ளியில் படிக்கும் மாணவிகள் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் அவலநிலை குறித்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) அனுப்பினார்.
இதை படித்து பார்த்ததும் தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ. ஆண்டிப்பட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தார். அங்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் கேட்டார். அப்போது பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை உடனடியாக செய்து தரும்படி ஆண்டிப்பட்டி பேரூராட்சி மற்றும் ஒன்றிய அலுவலர்களிடம் கேட்டுக் கொண்டார். மேலும் அங்கு செயல்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உத்தரவிட்டார்.
முன்னதாக ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் அவர் கலந்து கொண்டார். கோவிலில் நடந்த அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:ஞ
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் திப்பரவு அணைத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியில் உள்ள கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






