உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி பட்டியல்: மாவட்டத்தில் 17 லட்சத்து 42 ஆயிரத்து 242 வாக்காளர்கள்


உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி பட்டியல்: மாவட்டத்தில் 17 லட்சத்து 42 ஆயிரத்து 242 வாக்காளர்கள்
x
தினத்தந்தி 1 July 2017 4:00 AM IST (Updated: 1 July 2017 12:49 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி பட்டியல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 17 லட்சத்து 42 ஆயிரத்து 242 வாக்காளர்கள் ஆண்களை விட பெண்கள் அதிகம்

திண்டுக்கல்,

தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 17 மற்றும் 19–ந் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. முன்னதாக கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், செப்டம்பர் 20–ந் தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதற்கிடையே உள்ளாட்சி பதவிகளுக்கான இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என்று கூறி, தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட்டு உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்தநிலையில், கடந்த ஜனவரி 5–ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.

இதையடுத்து, புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வருகிற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் மாவட்டம் வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி நேற்று திண்டுக்கல் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான டி.ஜி.வினய் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதனை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரபாகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சந்திரசேகரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்த பட்டியலின்படி, திண்டுக்கல் மாநகராட்சியில் 80 ஆயிரத்து 868 ஆண் வாக்காளர்களும், 84 ஆயிரத்து 964 பெண் வாக்காளர்களும், 27 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 65 ஆயிரத்து 859 வாக்காளர்கள் உள்ளனர். பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் ஆகிய 3 நகராட்சிகளில் 53 ஆயிரத்து 743 ஆண் வாக்காளர்களும், 56 ஆயிரத்து 295 பெண் வாக்காளர்களும், 20 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரத்து 58 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், மாவட்டத்தில் உள்ள 23 பேரூராட்சிகளில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 126 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 47 ஆயிரத்து 440 பெண் வாக்காளர்கள், 12 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 578 வாக்காளர்கள் உள்ளனர். இதேபோன்று 14 ஊராட்சி ஒன்றியங்களிலும், 5 லட்சத்து 81 ஆயிரத்து 131 ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 96 ஆயிரத்து 527 பெண் வாக்காளர்கள், 89 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 11 லட்சத்து 77 ஆயிரத்து 747 வாக்காளர்கள் உள்ளனர்.

அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 8 லட்சத்து 56 ஆயிரத்து 868 ஆண் வாக்காளர்கள், 8 லட்சத்து 85 ஆயிரத்து 226 பெண் வாக்காளர்கள், 148 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 17 லட்சத்து 42 ஆயிரத்து 242 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களைவிட, 28 ஆயிரத்து 358 பெண் வாக்காளர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இறுதி வாக்காளர் பட்டியல் அந்தந்த உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர்களால் அனைத்து உள்ளாட்சி அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி எண்ணிக்கையின் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, திண்டுக்கல் மாநகராட்சியில் ஆண்களுக்கான வாக்குச்சாவடிகள் 37–ம், பெண்களுக்கான வாக்குச்சாவடிகள் 37–ம், பொது வாக்குச்சாவடிகள் 93 என மொத்தம் 167 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன. பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் ஆகிய 3 நகராட்சிகளில் ஆண்களுக்கான வாக்குச்சாவடிகள் 46–ம், பெண்களுக்கான வாக்குச்சாவடிகள் 46–ம், பொது வாக்குச்சாவடிகள் 41 என மொத்தம் 133 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள 23 பேரூராட்சிகளிலும், ஆண்களுக்கான வாக்குச்சாவடிகள் 33–ம், பெண்களுக்கான வாக்குச்சாவடிகள் 33–ம், பொது வாக்குச்சாவடிகள் 330 என மொத்தம் 396 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஆண்களுக்கான வாக்குச்சாவடிகள் 58–ம், பெண்களுக்கான வாக்குச்சாவடிகள் 58–ம், பொது வாக்குச்சாவடிகள் 2 ஆயிரத்து 26 என மொத்தம் 2 ஆயிரத்து 142 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி மாவட்டம் முழுவதும் ஆண்களுக்கான வாக்குச்சாவடிகள் 174–ம், பெண்களுக்கான வாக்குச்சாவடிகள் 174–ம், பொது வாக்குச்சாவடிகள் 2 ஆயிரத்து 490 என மொத்தம் 2 ஆயிரத்து 838 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.


Next Story