நாடு முழுவதும் ஒரே வரியை நடைமுறைப்படுத்துவது மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாகும்


நாடு முழுவதும் ஒரே வரியை நடைமுறைப்படுத்துவது மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாகும்
x
தினத்தந்தி 1 July 2017 4:45 AM IST (Updated: 1 July 2017 1:36 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் ஒரே வரியை நடைமுறைப்படுத்துவது, மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கக்கூடிய செயலாகும் என்று திருமாவளவன் கூறினார்.

மேலூர்

மேலூரை அடுத்த மேலவளவில் 2 விடுதலை சிறுத்தைகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக திருமாவளவன் நேற்று மேலவளவுக்கு வந்தார். அங்கு அவர் அஞ்சலி செலுத்திய பின்பு அவர் பேசியதாவது:– கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மேலவளவு ஊராட்சிமன்ற தலைவர் முருகேசன் உள்பட 7 பேர் படுகொலை செய்யப்பட்டார். அவர்களின் நினைவாக விடுதலைச்சிறுத்தைகள் எழுப்பிய நினைவிடம்தான் இந்த விடுதலைக்களம். இன்றைக்கும் தமிழகத்தில் ஆதிதிராவிடர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் போதிய சுதந்திரமும், உரிமையும் இல்லை. ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கூட, அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை தமிழகத்தில் பரவலாக உள்ளது.

மனித உரிமை அமைப்புகளின் ஆய்வுகளில் தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் நடைபெற்ற கொலை சம்பவங்களில் சாதி ஒழிப்பு நடவடிக்கை மற்றும் மனித உரிமைக்காக போராடிய 25 ஆதிதிராவிடர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. மதுரை அருகே வடபழஞ்சி என்ற இடத்தில் அரசு மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய முத்தமிழன், அவர் வசித்த தெருவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வன்கொடுமை தடுப்பு சட்டம் 2015–ன்படி தமிழக முதல்–அமைச்சர் உரிய நடவடிக்கைகள் எடுத்து ஆதிதிராவிடர் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பிரதமர் மோடி குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் உரையாற்றும்போது பசுக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் மனித உயிர்கள் பலியாவதை ஏற்கமுடியாது என்றார். அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. அது பேச்சாக மட்டும் இருந்துவிடாமல் அதை நடைமுறைபடுத்த பிரதமர் முயற்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்து தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது வரவேற்றகத்தக்கது. ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என்பது போல ஒரே தேசம், ஒரே வரி என்கின்ற அடிப்படையில் ஜி.எஸ்.டி. என்னும் ஒரே வரியை நடைமுறை படுத்துவது மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாகும். மாநில அரசுகள் தங்களின் வருவாயை பெருக்க வரிவிதிப்பு மூலம் நிதி திரட்டும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வு மூலம் மாநில உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பு போன்ற கல்வியிலும் இதே நிலைமை வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர்ராமலிங்கம், மாவட்ட குழு உறுப்பினர் அடக்கிவீரணன், மேலூர் தாலுகா செயலாளர் கண்ணன், கரும்பு விவசாய சங்க மாநில பொது செயலாளர் சண்முகம், தலைவர் வக்கீல் பழனிசாமி உள்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அனைத்து நிர்வாகிககள், பல்வேறு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Next Story