ஈரோடு மாவட்டத்தில் 25 இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்


ஈரோடு மாவட்டத்தில் 25 இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 1 July 2017 4:15 AM IST (Updated: 1 July 2017 1:47 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 25 இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். பகல் 11 மணிக்கு விவசாயிகள் தங்களது குறைகளை மனுக்களாக மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள். அதைத்தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:–

கீழ்பவானி வாய்க்காலின் கரைகள் பலவீனமாக உள்ளது. எனவே குடிமராமத்து திட்டத்தின் கீழ் கரைகளை பலப்படுத்த வேண்டும். சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாய சான்றிதழ் தேவைப்படுகிறது. இந்த சான்றிதழை விவசாயிகள் எளிய முறையில் பெற வழிவகை செய்ய வேண்டும்.

கோபி அருகே உள்ள கணக்கம்பாளையம் பகவதிநகர் பகுதியில் கடந்த 2002–ம் ஆண்டு ரூ.9 லட்சம் செலவில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணையில் தேங்கும் தண்ணீரை வனப்பகுதியில் உள்ள விலங்குகள் குடித்து வந்தன. தற்போது இந்த தடுப்பணையின் கரைகள் உடைபட்டு, மழைநீர் தேங்குவதில்லை.

இதனால் வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள் தண்ணீரை தேடி விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. எனவே தடுப்பணையில் தண்ணீர் தேங்க கரைகளை பலப்படுத்த வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகள் கடந்த பிப்ரவரி மாதம் 8–ந் தேதிக்கு பின்னர் விவசாயிகளிடம் இருந்து வெட்டிய கரும்புக்கு இன்னும் பணம் கொடுக்கவில்லை. கரும்பு வெட்டிய 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு உத்தரவின்படி கடந்த மாதம் முதல் ஈரோடு மாவட்டத்தில் 529 குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டு வருகிறது. அப்போது மண் எடுப்பதில் சிறு, சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பிரச்சினைகளை தீர்க்க மாவட்ட அளவில் குழு அமைக்கவேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இலவச மின்சாரம் வேண்டி விண்ணப்பித்த விவசாயத்துக்கு இன்னும் மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை. மேலும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.50 ஆயிரம் திட்டத்தின் கீழ் மின்சார இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கும், ரூ.25 ஆயிரம் திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்தவர்களுக்கும் இன்னும் மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது ரூ.3 லட்சம் கொடுத்தால் 6 மாதங்களில் மின்சார இணைப்பு கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

தஞ்சை மாவட்டத்தில் 25 நெல் கொள்முதல் நிலையங்களும், 50 உலர் களங்களும் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் 3 லட்சம் ஏக்கர் பாசன வசதி கொண்ட ஈரோடு மாவட்டத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் ஒன்று கூட இல்லை.

எனவே ஈரோடு மாவட்டத்திலும் 25 இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் 50 உலர் களங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் காய்ந்த தென்னை மரங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வறட்சி நிவாரணமாக வழங்கவேண்டும்.

உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க 900 சதுர அடி விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. புதிய திட்டங்களுக்கு நிலம் தேவைப்படும்போது அதற்கான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் இவற்றையெல்லாம் செய்யாமல் விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்படுகிறது. மேலும் அவ்வாறு எடுக்கப்படும் நிலங்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படுவதில்லை.

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. எனவே அவர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு செல்லும்போது சில அமைப்புகள் சார்பில் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. எனவே அந்த அமைப்புகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விதைக்காக வீட்டில் வைக்கப்பட்டு உள்ள மஞ்சள் தற்போது முளைவிட்டுள்ளது. இதை காப்பாற்ற வருகிற ஜூலை மாதம் கடைசியில் காலிங்கராயன் வாய்க்காலில் 15 நாட்களாவது உயிர்நீர் திறக்க வேண்டும். விவசாயத்துக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்து மீது வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் உரத்தின் விலை ஒரு மூட்டைக்கு ரூ.50 வரை உயர்ந்துள்ளது.

இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு முழு வரி விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு விவசாய சங்க பிரதிநிதிகள் கூறினார்கள்.

அதைத்தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறியதாவது:–

குளம் மற்றும் குட்டைகள் தூர்வாரும் பணியில் உள்ள குறைகளை போக்க, கோபி ஆர்.டி.ஓ. மற்றும் ஈரோடு ஆர்.டி.ஓ. தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு வாரத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கூடி, தூர்வாரும் பணியில் உள்ள குறைகளை களையும். மேலும் தூர்வாரும் பணியில் ஏதேனும் தவறுகள் நடப்பதாக தெரிந்தால் உடனடியாக விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் தெரியப் படுத்தலாம்.

ஈரோடு மாவட்டத்தில் 4 இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் மற்றும் உலர் களங்கள் எந்தெந்த இடங்களில் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரியப்படுத்தினால் அங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story