ஈரோட்டில் மேம்பாலத்துக்கான பணிகள் தொடங்கியது ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் இடித்து அகற்றம்


ஈரோட்டில் மேம்பாலத்துக்கான பணிகள் தொடங்கியது ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 1 July 2017 3:45 AM IST (Updated: 1 July 2017 1:47 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் மேம்பாலத்துக்கான பணிகள் தொடங்கியதையொட்டி ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் இடித்து அகற்றப்பட்டன.

ஈரோடு

ஈரோடு மாநகர மேம்பாட்டுக்கான கனவுத்திட்டங்களில் ஒன்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே மேம்பாலம் கட்டுதலாகும்.

சுமார் 50 ஆண்டுகாலமாக வெறும் கோரிக்கையாக இருந்த இந்த திட்டத்துக்கு முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா செயல் வடிவம் கொடுத்து ரூ.58½ கோடி நிதி ஒதுக்கினார். அவர் அறிவித்த திட்டத்துக்கு தற்போதைய முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஜூன் மாதம் 11–ந் தேதி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து கட்டுமான பணிகளுக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. நெடுஞ்சாலைத்துறை ஏற்கனவே அதிகாரிகள் அளவீடு செய்த பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த 3 நாட்களாக நடந்தது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார் ஏற்கனவே ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதன்படி பெரும்பாலானவர்கள் தங்கள் கடைகள் மற்றும் நிறுவனங்களின் முன்பு வைக்கப்பட்டு இருந்த பலகைகள் உள்ளிட்ட பொருட்களை அகற்றினார்கள்.

அதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார், போக்குவரத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் இருந்து பிரப் ரோட்டில் கலை மகள் கல்வி நிலையம் வரை இருந்த ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் அகற்றப்பட்டன. சவீதா சந்திப்பு பகுதியில் இருந்த பஸ் நிறுத்த நிழற்குடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இதுபோல் மேம்பால கட்டுமானம் நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

முதல் கட்டமாக கலைமகள் கல்வி நிலையம் எதிரில் மேம்பாலத்துக்கான பணியை தொடங்க எந்திரங்கள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. அந்த பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, ‘மேம்பாலத்துக்கான கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்’ என்றார்கள்.

பொதுமக்கள் சிலர் கூறும்போது, ‘ஏற்கனவே பாதாள சாக்கடை திட்டத்துக்கு தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமலும், சாலை சரி செய்யப்படாமலும் இருப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எங்கு பார்த்தாலும் நெரிசலாகவும் உள்ளது. தற்போது மேம்பால பணிகள் தொடங்குவதால் பிரப் ரோடு, பெருந்துறை ரோட்டில் கடுமையான நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே போக்குவரத்து எளிதாக செல்ல உடனடியாக போக்குவரத்து போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து மாற்று பாதைகளை அறிவிக்க வேண்டும்’ என்றார்கள்.

1 More update

Next Story