சிறு, குறு விவசாயிகளுக்கு பசுமைகுடில் அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்க வேண்டும்
சிறு, குறு விவசாயிகளுக்கு பசுமைகுடில் அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பேசினார். வேளாண்மை இணை இயக்குனர் ராஜகோபால் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு:–
விவசாயி தனபதி பேசுகையில், புதுக்கோட்டையில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட கலெக்டருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அண்டக்குளம் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
விவசாயி சண்முகம் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு பசுமைகுடில் அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்க வேண்டும், என்றார்.
இதைத்தொடர்ந்து பயிர் காப்பீட்டு தொகை குறித்து பயிர்காப்பீட்டு அதிகாரி விளக்கம் அளித்தார். அப்போது அவர் 2016–17–ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகை நெல்லுக்கு மட்டும் தற்போது வழங்கப்பட உள்ளது என்றார்.
அப்போது கூட்டத்தில் இருந்த விவசாயிகள் அனைவரும் 2013–14 மற்றும் 2014–15–ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகை இதுவரை எங்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது 2016–17–ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதாக நீங்கள் கூறுவதால், எங்களுக்கு 2013–14, 2014–15–ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகை எங்களுக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்து வேளாண்மை இணை இயக்குனர் ராஜகோபால் பேசுகையில், புது திட்டத்தின் அடிப்படையில்தான் தற்போது பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிர் காப்பீட்டுத் தொகை ஒரு வாரத்திற்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றார்.
விவசாயி பொன்னுசாமி பேசுகையில், வறட்சி நிவாரணம் அனைத்து விவாயிகளுக்கு வழங்க வேண்டும். இதேபோல வருவாய் கிராமங்களில் பயனாளிகளின் பட்டியலை வெளிப்படையாக பொதுமக்கள் அறியும் வண்ணம் தகவல் பலகையில் விளம்படுத்த வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் காய்ந்த பயிர்களை கண்டு அதிர்ச்சியில் இறந்து போன விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், என்றார்.
விவசாயி பவுன்ராஜ் பேசுகையில், கருப்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை கலெக்டர் தலையிட்டு பெற்றுத்தர வேண்டும். கந்தர்வகோட்டை பகுதியில் உழுந்து அதிக அளவில் பயிரிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு உழுந்து கிலோ ரூ.150–க்கு விற்பனையானது. இந்த ஆண்டு ரூ.40 முதல் ரூ.50 வரைதான் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அரசு ஒரு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும், என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.