பெங்களூருவில் 50 சதவீத மதுபானக்கடைகள் – விடுதிகள் மூடல்
தகவல் தொழில்நுட்ப நகரம், பூங்கா நகரம், குளு,குளு நகரம் என அழைக்கப்படும் பெங்களூருவில் தகவல்தொழில் நுட்ப நிறுவனங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள் என நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன.
தகவல் தொழில்நுட்ப நகரம், பூங்கா நகரம், குளு,குளு நகரம் என அழைக்கப்படும் பெங்களூருவில் தகவல்தொழில் நுட்ப நிறுவனங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள் என நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன. இதேபோல் பல கல்வி நிறுவனங்களும் உள்ளன. எனவே தினமும் பெங்களூருவிற்கு கல்வி மற்றும் வேலை தேடி தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வருகின்றனர். அதேபோல் பல வெளிநாட்டு மாணவர்களும் இங்குள்ள கல்வி நிறுவனங்களில் தங்கி பயின்று வருகின்றனர். பெங்களூருவில் மட்டும் சுமார் 1 கோடி மக்கள் வசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இப்படி இளைஞர்களின் கூடாரமாக இருக்கும் பெங்களூருவில் தனி நபர்கள் சார்பில் மதுபான விடுதி, கேளிக்கை விடுதிகள், மதுபான கடைகள் நடத்தப்படுகிறன. பெங்களூருவில் உள்ள பல முக்கிய சாலைகளில் இந்த மதுக்கடைகள், மதுபான விடுதி, கேளிக்கை விடுதிகளை காணலாம். இந்த மதுபான விடுதி, கேளிக்கை விடுதிகள் படிக்கும் மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்களின் சொர்க்கமாக உள்ளது. நண்பர்களின் பிறந்தநாள் விழாக்கள், பள்ளி மற்றும் கல்லூரி விழாக்கள், பண்டிகை, விசேஷ நாட்களில் என தினமும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த விடுதிகளில் கொண்டாடி வருகிறார்கள்.
பெங்களூருவில் சில பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும் மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் குடும்பத்தில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இணைந்து குடிக்க பிரத்யேக கேளிக்கை விடுதிகளும் இங்கு உள்ளன. இப்படி மதுபிரியர்களின் கூடாரமாக திகழும் பெங்களூருவிற்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது குடித்துவிட்டு வாகனங்களை இயக்குபவர்களால் சாலைகளில் விபத்து அதிகரித்து வருவதால் அனைத்து மாநிலங்களில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் எந்த ஒரு மதுக்கடையும் செயல்பட கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த அதிரடி உத்தரவால் பல மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மதுக்கடைகளை மாநில அரசு மூடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதேபோல் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள், மதுபான விடுதிகள், மதுபான வசதிகள் உள்ள கேளிக்கை விடுதிகளை மூடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பால் கேரளா, உத்தரபிரதேச மாநிலங்கள் அங்குள்ள மதுக்கடைகளை மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றி வேறு இடத்தில் திறந்து வருகின்றன. மதுக்கடை வருமானத்தை நம்பி உள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தங்களது மாநில நெடுஞ்சாலை விதியை மாற்றி வருகிறது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாத காலமாக பல பகுதிகளில் போராடி வருகின்றனர்.
ஆனால் கர்நாடக அரசு, உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்த எந்த ஒரு கொள்கை ரீதியிலான முடிவும் எடுக்கவில்லை. இதனால் பெங்களூருவில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளையொட்டி பெங்களூரு கிழக்கு பகுதியில் 221–ம், மேற்கு பகுதியில் 125–ம், வடக்கு பகுதியில் 54–ம், தெற்கு பகுதியில் 244–ம் என மொத்தம் 644 மதுபான கடைகள், மதுபான விடுதிகள், மதுபான வசதி கொண்ட கேளிக்கை விடுதிகளை மூடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அதை நடத்தும் உரிமையாளர்கள் செய்வது அறியாமல் பீதியில் உறைந்து உள்ளனர். மேலும் இந்த மதுக்கடைகள், மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது.
இதுகுறித்து மதுபான அனுமதி பெற்ற 5 நட்சத்திர ஓட்டலில் பணிபுரியும் அதிகாரி கூறும்போது:–
உச்சநீதிமன்ற தீர்ப்பால் தற்போது எங்கள் 5 நட்சத்திர ஓட்டலில் மதுபான விடுதியை மூடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆண்டுக்கு சுமார் 30 முதல் 35 கோடி ரூபாய் வருமான இழப்பு எங்களுக்கு ஏற்படும். தற்போது எங்கள் முன்னால் 3 வழிகள் தான் உள்ளன. முதலாவது மாநில அரசு நெடுஞ்சாலை குறித்த அரசின் கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டும் அல்லது உச்சநீதிமன்ற இந்த உத்தரவுக்கு தடை வாங்கும் வரை மாநில அரசு எங்களுக்கு வேறு இடங்களில் மதுபான விடுதிகள், மதுக்கடைகளை நடத்த தற்காலிக அனுமதி வழங்கவேண்டும். அல்லது பஞ்சாப் மாநிலத்தில் கொண்டு வந்து உள்ளது போல கலால்துறை சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் மதுபான விடுதிகள் நடத்த சில விதிமுறைகளை இயற்ற மாநில அரசு முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில அரசு சட்ட, திருத்தம் கொண்டு வருகிறதோ, இல்லையோ ஆனால் ஜூலை 1–ந்தேதி (இன்று) முதல் பெங்களூருவில் உள்ள 50 சதவீத மதுக்கடைகள், விடுதிகள் மூடப்பட உள்ளது. இதனால் பல சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும், மதுவுக்கு எதிராக போராடுபவர்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.