முடியை இழந்த பின்பும் அழகியாக முடிசூடிய பெண்


முடியை இழந்த பின்பும் அழகியாக முடிசூடிய பெண்
x
தினத்தந்தி 2 July 2017 10:00 AM IST (Updated: 1 July 2017 3:54 PM IST)
t-max-icont-min-icon

தலையில் ‘டாட்டூ’வுடன் காட்சியளிக்கும் இந்த பெண்மணியின் பெயர் கேத்கி ஜானி. டாட்டூ மீதான மோகத்தால் தனது தலையை மொட்டையடித்துக் கொண்டுள்ளார் என்று நினைத்தால் அது தவறு.

லையில் ‘டாட்டூ’வுடன் காட்சியளிக்கும் இந்த பெண்மணியின் பெயர் கேத்கி ஜானி. டாட்டூ மீதான மோகத்தால் தனது தலையை மொட்டையடித்துக் கொண்டுள்ளார் என்று நினைத்தால் அது தவறு. அடர்ந்த கூந்தலுக்கு சொந்தக்காரராக இருந்து, அரிதான நோயால் அத்தனை முடியையும் இழந்து, மொட்டையடிக்க வேண்டிய சோகத்திற்கு உள்ளான கேத்கி, அதையே தனக்கு சாதகமாக மாற்றி, இன்று ‘டாட்டூ நாயகி’யாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

கேத்கி தனது இளமைப்பருவத்தில் பேரழகியாக வலம் வந்திருக்கிறார். திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட்டிருக்கிறார். திடீரென்று இவரது வாழ்க்கை மாறியது. எலோபீசியா என்ற நோயால் பாதிக்கப்பட்டார். கொத்துக்கொத்தாக முடிகொட்டியிருக்கிறது. நிலை         குலைந்து போய்விட்டார். பின்பு மற்றவர்களின் பரிதாப பார்வைக்கு இலக்காகி, வீட்டுக்குள்ளே அடைபட்டு கிடந்திருக்கிறார்.

வியாதிக்கு தலைமுடியை பறிகொடுத்த சோகத்தையும், டாட்டூ அவரது வாழ்க்கையில் ஏற்படுத்திய மறுமலர்ச்சியையும் கேத்கியே சொல்கிறார்!

‘‘எனக்கு சிறுவயதில் இருந்தே அடர்த்தியான, நீண்ட கூந்தல் இருந்தது. நாற்பது வயது வரை ஒருமுடிகூட நரைக்கவில்லை. 2011–ம் ஆண்டு திடீரென்று முடி கொட்டத் தொடங்கியது. நான் ஆரம்பத்தில் அதை சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டேன். ஒருநாள் தலைமுடிக்கு மசாஜ் செய்துகொண்டிருந்தபோது, ஒரு இடத்தில் உருண்டையாக கட்டி ஒன்று தென் பட்டது. கண்ணாடியில் அந்த இடத்தை பார்த்தபோது அதில் முடி முளைக்கவில்லை. மருத்துவரிடம் சென்று பரிசோதித்தபோது எலோபீசியா நோயால் முடி இழப்பு ஏற்பட்டி    ருப்பதாக சொன்னார். நிறைய மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார். தலைக்கு தடவவும் மருந்துகள் கொடுத்தார்.

அத்தனையையும் சாப்பிட்டேன். அதன் பின்பு முடி கொத்துக்கொத்தாய் கொட்டியது.

‘நீ என்ன வேணுமானாலும் செய்துகொள். நான் கொட்டியே தீருவேன்’ என்று மருந்துக்கு போட்டியாக முடி வெறித்தனமாகக் கொட்டியது. நாளடைவில் தலையில் முடி குறைந்து ஆங்காங்கே வழுக்கை தெரிய ஆரம்பித்தது. அதை பார்த்து அதிர்ந்து போனேன். என் உடலும் மனமும் சோர்ந்து போனது. அழக்கூட எனக்கு தெம்பில்லை. மன அழுத்தம் ஆட்கொண்டது. அன்றாட பணிகளில் தொய்வு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை தடம் புரண்டது.

என்னை யாராவது காப்பாற்ற வரமாட்டார்களா? என்று துடித்தேன். முடி விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர வாய்ப்பே இல்லை என்பதை அறிந்ததும் சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்ந்தேன். மற்றவர்களின் ஏளனத்துக்கும், பரிதாபப் பார்வைக்கும் இலக்கானேன். அதனால் வீட்டுக்குள்ளே சிறைபட்டேன். நான் அனுபவித்து வந்த மகிழ்ச்சிகள் ஒவ்வொன்றாய் என்னை விட்டு விலகியது. அப்போது என் வாழ்க்கையே இருண்டுபோனது’’ என்று, கசப்பான தனது கடந்தகால வாழ்க்கையை விவரிக்கிறார்.

இந்த காலகட்டத்தில் கேத்கிக்கு அவருடைய குடும்பத்தினர் பக்கபலமாக இருந்திருக் கிறார்கள். எப்படியாவது வியாதியின் பிடியில் இருந்து  அவரை விடுவித்து பழையநிலைக்கு கொண்டு வர கடுமையாக போராடியிருக்கிறார். ஆனால் ஏமாற்றமும், பக்க விளைவுகளுமே பின்தொடர்ந்திருக்கின்றன.

‘‘எனக்கு ஏற்பட்டிருந்தது ஒரு தீராத வியாதி. இதை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று சொன்னார்கள். என் கணவரும், குழந்தைகளும் ஆதரவாக இருந்தார்கள். மகள் என்னிடம் ‘அம்மா வருத்தப்படாதே.. என் முடியை வேண்டுமானால் வெட்டித் தரு            கிறேன்’ என்று கூறி அணைத்துக்கொள்வாள். என் கணவர், ‘முடி போனால் போகட்டும். அதற்காக நான் உன்னை வெறுத்துவிட மாட்டேன். முடி இல்லாமலும் நீ அழகாகத்தான் இருக் கிறாய்’ என்று ஆறுதல்படுத்துவார். அவர்களுடைய அன்பு என்னை நெகிழவைத்தது.

எனது வழுக்கைத்தலையில் முடி முளைக்க வாய்ப்பே இல்லை என்பது தெரிந்த பின்பு, அந்த சோகச் சூழலில் இருந்து வெளியே வர தெளிவான முடிவு எடுத்தேன். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்          களுக்கான உலக அமைப்போடு பேசினேன். அவர்களும் எனக்கு தன்னம்பிக்கையூட்டினார்கள். நானும் தனிமையில் இருந்து விடுபட்டு சமூகத்தோடு நெருங்கிப்பழக விரும்பினேன். ஆனால் விதி என்னை துரத்தி கஷ்டப்படுத்தத்தான் செய்தது’’ என்றார்.

அந்த காலகட்டத்தில் சிலர் இவரிடம் ஸ்டீராய்ட் அடங்கிய மருந்துகள் சாப்பிட்டால் பலன் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்கள். அதை சாப்பிட்டிருக்கிறார். பின்பு சிறிதளவு முடிகள் வளரத் தொடங்கியிருக்கின்றன.

‘‘கொஞ்சம் கொஞ்சமாக முடி வளர ஆரம்பித்ததும் நான் எல்லையில்லாத மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநாட்கள் நீடிக்கவில்லை. பக்கவிளைவுகளை ஏற்படுத்தி என் உடலைப் பாழ்படுத்திவிட்டது. கிடுகிடுவென உடல் எடை கூடியது. வளர்ந்த முடியும் கொட்டியது. என்னை எல்லோரும் ஒரு வித்தியாசமான ஜீவன் போன்று பார்க்கத் தொடங்கினார்கள். என் மண்டை முழு வழுக்கையானது.

மொட்டைத்தலையில் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். என் உடலில் எங்காவது ‘டாட்டூ’ வரைந்துகொள்ளவேண்டும் என்ற ஆசை வெகுநாளாக இருந்தது. அதற்கு சரியான நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தேன். டாட்டூ பார்லருக்கு சென்று, என் வழுக்கைத்தலையில் டாட்டூ பதிக்கும்படி கூறினேன். முதலில்  அங்குள்ளவர்கள் தயங்கினார்கள். ‘தலை முழுவதும் டாட்டூ போட்டுக்கொள்வது பெரிய வேலை. அதற்காக நீங்கள் மரண வலியை அனுபவிக்கவேண்டும்’ என்றார்கள். நான், அதைவிட பெரிய வலியை இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு மரணவலி ஒன்றும் பெரிதில்லை. டாட்டூ போடுங்கள் என்றேன்.

என் மனஉறுதியை பாராட்டி எனக்கு டாட்டூ போட ஆரம்பித்தார்கள். முதலில் ‘ஓம்’ என்ற எழுத்து. பிறகு பறவை, இறகு என்று பல டிசைன்கள் என் மண்டையில் இடம்பிடித்தன. அதை பார்த்ததும் எனக்கு மனநிறைவு ஏற்பட்டது. விக் வைப்பதைவிட இது அழகாக இருந்தது. சவுகரியமாகவும் இருந்தது’’ என்று புன்னகைக்கிறார், கேத்கி.

‘‘இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருபோதும் தன்னம்பிக்கையை இழந்துவிடக்  கூடாது. முடி போனாலும் வாழமுடியும் என்று நம்பிக்கைகொள்ளவேண்டும். தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் சமூகத்தோடு ஒட்டிஉறவாட முன்வரவேண்டும்’’ என்று கூறும் கேத்கி, அதன் பிறகு அழகுப் போட்டியில் பங்கு பெற்று வெற்றியும் பெற்றுள்ளார்.

‘‘முடி இல்லாவிட்டால் பெண்களுக்கு  அழகுபோய்விடும் என்று பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். முடி இல்லாத நான் அழகுடன் திகழ்வதாக கருதி ‘மிஸஸ் இண்டியா வேர்ல்டு வைய்டு’ போட்டியில் கலந்துகொண்டேன். அதில் எனக்கு ‘இன்ஸ்ப்ரே‌ஷன் விருது’ கிடைத்தது. அதனை என்னைப் போன்று இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சமர்ப்பிக்கிறேன்’’ என்று கூறும் கேத்கி ஜானி தன்னைப் போன்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சமூக வலைதளம் மூலம் தொடர்ந்து தன்னம்பிக்கையூட்டிவருகிறார்.

Next Story