தூத்துக்குடி மாவட்டத்தில் கோழிப்பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வெங்கடேஷ் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கோழிப்பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கோழிப்பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
கோழிப்பண்ணைதமிழ்நாடு அரசு கோழிப்பண்ணை தொழிலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கோழி அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நடப்பு ஆண்டில் இந்த திட்டத்துக்கு ரூ.18 கோடியே 75 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 10 கறிக்கோழி பண்ணைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் விவசாயிகள், தனிநபர் தொழில் முனைவோர், சுய உதவிக்குழுக்கள் ஆகியோர் பயன்பெறலாம்.
கோழிப்பண்ணை அமைக்க போதிய நிலம் விண்ணப்பதாரர் பெயரிலோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர் பெயரிலோ இருத்தல் வேண்டும். கோழி வளர்ப்பில் முன் அனுபவம் உள்ளவர்களும், கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகளும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். பயனாளிகள் தங்கள் சொந்த முதலீட்டில் அல்லது வங்கி கடன் பெற்று கோழிப்பண்ணை அமைக்கலாம். 1,000 முதல் 5 ஆயிரம் கறிக்கோழிகள் வரை வளர்ப்பதற்கான பண்ணைகள் அமைக்க கொட்டகை கட்டும் பணி மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கான செலவில் 25 சதவீதம் முன்மானியமாக அரசு வழங்குகிறது.
விண்ணப்பிக்கலாம்தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி மையங்களில் 3 நாட்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் கறிக்கோழி பண்ணை ஒருங்கிணைப்பாளரின் கடிதம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கான சான்றுடன் தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர், உதவி இயக்குனர் அலுவலகங்களில் வருகிற 10–ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.