பாளையங்கோட்டை அருகே நடந்த வாலிபர் கொலையில் 2 பேர் கைது


பாளையங்கோட்டை அருகே நடந்த வாலிபர் கொலையில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 July 2017 1:30 AM IST (Updated: 1 July 2017 8:40 PM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை அருகே நடந்த வாலிபர் கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை,

பாளையங்கோட்டை அருகே நடந்த வாலிபர் கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

வாலிபர் கொலை

பாளையங்கோட்டை அருகே உள்ள பர்கிட் மாநகரத்தை சேர்ந்தவர் பழனி (வயது 55). இவருடைய மகளுக்கு நேற்று முன்தினம் இரவு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது இளைஞர்கள் அங்குள்ள தெருவில் பட்டாசுகள் வெடித்தனர்.

அப்போது லயன் தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து மகன் மணி என்ற மாடசாமி (27), மாலைத்தேவர் மகன் முண்டசாமி (36) ஆகிய 2 பேரும் அங்கு நின்று பேசிக்கொண்டிருந்தனர். இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பட்டாசுகள் வந்து விழுந்துள்ளன. இதைக்கண்ட மணி இங்கே வீடுகள், மோட்டார் சைக்கிள் உள்ளன. எனவே பட்டாசு வெடிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.

இது தொடர்பாக மணிக்கும், பட்டாசு வெடித்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த கும்பல் மணியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதை தடுக்க முயன்ற முண்டசாமிக்கும் கத்திக்குத்து விழுந்தது. அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

2 பேர் கைது

இதுதொடர்பாக பாளையங்கோட்டை தாலுகா போலீசார், பர்கிட் மாநகரத்தை சேர்ந்த கண்ணன், லட்சுமணன், முத்துராஜா, முருகேஷ், செல்வம், பழனி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் லட்சுமணன், பழனி ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். கண்ணன் உள்பட 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story