நெல்லையில் அடிப்படை வசதிகள் கேட்டு பொது மக்கள் போராட்டம்


நெல்லையில் அடிப்படை வசதிகள் கேட்டு பொது மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 2 July 2017 2:00 AM IST (Updated: 1 July 2017 8:58 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் அடிப்படை வசதிகள் கேட்டு பொது மக்கள் கருப்பு கொடிகளுடன் போராட்டம் நடத்தினர்.

நெல்லை,

நெல்லையில் அடிப்படை வசதிகள் கேட்டு பொது மக்கள் கருப்பு கொடிகளுடன் போராட்டம் நடத்தினர்.

அடிப்படை வசதிகள்

நெல்லை வண்ணார்பேட்டையில் குடிநீர், கழிப்பறை வசதி மற்றும் கழிவுநீர் ஓடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறுவர் விளையாட்டு பூங்காவில் இருந்த உபகரணங்களை வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி அப்புறப்படுத்தியதை கண்டித்தும், சலவையாளர் உலர் நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது.

இதையொட்டி வண்ணார்பேட்டையில் இருந்து தாமிரபரணி ஆற்றுக்கு செல்லும் ரோட்டில் சலவையாளர் உலர் நிலையம் மற்றும் சுகாதார வளாகம் அருகில் பொது மக்கள் கையில் கருப்பு கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து உண்ணாவிரதமும் இருந்தனர். இதுதவிர தெருக்களிலும் கருப்பு கொடிகளை கட்டி இருந்தனர்.

போலீசார் பேச்சுவார்த்தை

இந்த போராட்டத்தில் இந்து மகாசபா நிர்வாகி வண்ணை கணேசன் உள்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் அங்கு வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது தொடர்பாக கலெக்டர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொது மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். பின்னர் பொது மக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.
1 More update

Next Story