தமிழக–கர்நாடக எல்லையில் வசூல் வேட்டையில் நடுங்க வைக்கும் வனத்துறை சோதனைச்சாவடி


தமிழக–கர்நாடக எல்லையில் வசூல் வேட்டையில் நடுங்க வைக்கும் வனத்துறை சோதனைச்சாவடி
x
தினத்தந்தி 2 July 2017 4:30 AM IST (Updated: 2 July 2017 12:14 AM IST)
t-max-icont-min-icon

தமிழக–கர்நாடக எல்லையில் உள்ள கக்கநல்லா வனத்துறை சோதனைச்சாவடியில் நடுங்க வைக்கும் வசூல் வேட்டை நடப்பதாக வாகன ஓட்டிகள் புகார் கூறி உள்ளனர்.

கூடலூர்,

கூடலூரில் இருந்து முதுமலை வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் தமிழக– கர்நாடகா எல்லையான கக்கநல்லாவில் நீலகிரி மாவட்ட போலீசார் சோதனைச்சாவடி அமைத்து இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருமாநில எல்லைக்கு இடையே ஆறு ஓடுகிறது. அதனை கடந்து செல்லும் வகையில் பெரிய பாலமும் உள்ளது. அந்த பாலத்தின் அருகில் கர்நாடகா எல்லையில் பந்திப்பூர் வனத்துறையினர் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை என்பதாலும், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் முக்கிய சாலையாக விளங்குவதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இரு மாநிலங்களுக்கும் இடையே இயக்கப்படுகிறது. தமிழக எல்லையில் முதுமலை புலிகள் காப்பகமும், கர்நாடகா எல்லையில் பந்திப்பூர் புலிகள் காப்பகமும் உள்ளது. இதனால் இரவில் வாகனங்கள் இயக்கப்படுவதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை கர்நாடகா வனத்துறை தேசிய நெடுஞ்சாலையை மூடி வருகிறது.

இதனால் ஊட்டிக்கு சென்று திரும்பும் சுற்றுலா பயணிகள் மற்றும் மைசூர், பெங்களூருக்கு பல்வேறு காரணங்களுக்காக சென்று வரும் பொதுமக்கள் அவசர கதியில் இரவு 9 மணிக்குள் மாநில எல்லைகளை கடக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் தமிழக– கர்நாடகா இடையே இயக்கப்பட்டது. மேலும் இரவு 9 மணிக்கு கர்நாடகா எல்லைக்குள் சென்று விட வேண்டிய நிர்பந்தம் உள்ளதை பயன்படுத்தி கர்நாடகா வனத்துறையினர் சுற்றுலா பயணிகளிடம் வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் கூடலூர்– ஊட்டி தேசிய நெடுஞ்சாலையாக உள்ள மலைப்பாதையில் வாகன போக்குவரத்து நெருக்கடி அதிகமாக உள்ளது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் இரவு 9 மணிக்குள் மாநில எல்லையை கடந்து தங்களது ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்பதால் அவசர கதியில் வாகனங்களை இயக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பல இடங்களில் வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

இரவு 8.55 மணி ஆனவுடன் கர்நாடகா வனத்துறையினர் தங்களது சோதனைச்சாவடியை அடைத்து விடுகின்றனர். பின்னர் சில நிமிடங்கள் தாமதமாக வரும் சுற்றுலா பயணிகளிடம் ரூ.500 வரை பேரம் பேசி அடாவடி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரவில் குடும்பத்துடன் நடுவழியில் நிற்பதை தவிர்க்க சுற்றுலா பயணிகள் அல்லது வாகன ஓட்டிகள் அதிக தொகையை கர்நாடகா வனத்துறையிடம் செலுத்தி விட்டு அங்கிருந்து செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. இதில் கூடலூரை சேர்ந்த வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட கூடலூர் வியாபாரிகள் சிலர் கூறியதாவது:–

வாரந்தோறும் மைசூருக்கு பொருட்கள் வாங்க சென்று விட்டு வரும் போது இரவு 9 மணி ஆவதற்கு முன்பாகவே கர்நாடகா வனத்துறை சோதனைச்சாவடியில் அடையாளம் தெரியாத நபர்கள் உட்கார்ந்து கொண்டு, வனத்துறையினர் என்கிற போர்வையில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி எங்களை போன்ற வியாபாரிகளின் வாகனங்களை மறித்து காலதாமதமாக வருவதாக கூறி, நடுங்கவைக்கும் அடாவடி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு பணம் தர மறுக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை மாநில எல்லைக்குள் கர்நாடகா வனத்துறையினர் அனுமதிப்பது இல்லை.

இதேபோல் காய்கறி மூடைகளை ஏற்றி கொண்டு செல்லும் கேரள டிரைவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரவு 9 மணிக்கு முன்பாக வருபவர்களிடமும், சில நிமிடங்கள் தாமதமாக வருபவர்களிடம் குறைந்தது ரூ.500 வரை வசூல் செய்யப்படுகிறது. மாநில எல்லையில் நடக்கும் அட்டூழியங்களை கர்நாடகா அரசும் கண்டு கொள்வது இல்லை. கர்நாடகா வனத்துறை உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story