வளசரவாக்கத்தில் வாலிபரை காரில் கடத்திய 7 பேர் கைது
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி ஏமாற்றியதால், சென்னை வளசரவாக்கத்தில் வாலிபரை காரில் கடத்திச் சென்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர் ராஜன் என்ற செல்வராஜ் (வயது 54). இவருடைய நண்பர் ரெஜி(34). இவர்கள், கடந்த சில தினங்களாக சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு ஊருக்கு செல்வதற்காக ஓட்டல் வாசலில் காரில் ஏற தயாராக நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மற்றொரு கார் வந்து நின்றது. அதில் இருந்து 6 பேர் கீழே இறங்கி வந்தனர். அவர்களை கண்டதும் செல்வராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். ரெஜியும் ஓட முயன்றார்.
ஆனால் அவரை அந்த கும்பல் மடக்கிப்பிடித்து காரில் ஏற்றினர். இதுபற்றி ஓட்டல் ஊழியர்கள் கேட்டதற்கு, நாங்கள் போலீஸ்காரர்கள். விசாரணைக்காக அவரை அழைத்து செல்கிறோம் என்று கூறி விட்டு காரில் ஏறி சென்று விட்டனர். எனினும் இது தொடர்பாக ஓட்டல் ஊழியர்கள், வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த காரின் நம்பரையும் தெரிவித்தனர்.
இதையடுத்து உதவி கமிஷனர் குணசேகரன், இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
மர்மநபர்கள் வந்த காரின் நம்பரை வைத்து அது யாருடைய கார்? என்று விசாரித்தனர். அதில், அந்த கார் அம்பத்தூரை சேர்ந்த ஜஸ்டின் ஜான்(38) என்பவருக்கு சொந்தமானது என தெரிந்தது. உடனடியாக நள்ளிரவில் அவரது வீட்டுக்கு சென்ற போலீசார், அங்கிருந்த ஜஸ்டின் ஜானை பிடித்து விசாரித்தனர்.
அதில், ரெஜியை தனது கூட்டாளிகள் தான் காரில் கடத்தி சென்றதாகவும், போலீசாரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க ரெஜியுடன் காரில் சென்னை முழுவதும் சுற்றி வருவதாகவும், காலையில் போரூர் சுங்கச்சாவடியை கார் கடக்கும் என்றும் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அதன்படி நேற்று காலையில் போரூர் சுங்கச்சாவடி அருகே வந்த அந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர். காரில் ரெஜி உள்பட 7 பேர் இருந்தனர். ரெஜியை மீட்ட போலீசார், காரில் இருந்த அனைவரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது:–
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்தவர் பாபு(38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், தக்கலையை சேர்ந்த செல்வராஜூக்கும் செல்லாதது என அறிவிக்கப்பட்ட பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுப்பது தொடர்பாக பழக்கம் ஏற்பட்டது.
அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாபு, தன்னிடம் இருந்த குறிப்பிட்ட ஒரு தொகை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரும்படி செல்வராஜிடம் கொடுத்தார். அப்போது அங்கு காரில் போலீசார் போல் வந்த கும்பலை பார்த்து பாபு, தப்பி ஓடிவிட்டார்.
தனது பணம் குறித்து செல்வராஜிடம் கேட்க அவரை தொடர்பு கொண்டபோது, அவர் தலைமறைவாகி விட்டது தெரிந்தது. அப்போதுதான் செல்வராஜ் தனது நண்பர் ரெஜியுடன் சேர்ந்து இதேபோல் பலரிடம் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கும்போது தனது ஆட்களையே போலீசார் போல் வரவழைத்து நூதன முறையில் பணம் பறித்து ஏமாற்றுவதை வழக்கமாக கொண்டு இருப்பது பாபுவுக்கு தெரிந்தது.
அதன் பிறகு செல்வராஜ், ரெஜி இருவரையும் அவர் தீவிரமாக தேடி வந்தார். இந்தநிலையில் வளசரவாக்கம் ஓட்டலில் அவர்கள் தங்கி இருப்பதை அறிந்த பாபு, ஜஸ்டின் ஜான் உதவியுடன் இருவரையும் காரில் கடத்திச் சென்று பறிகொடுத்த பணத்தை மீட்க முயற்சி செய்ததும், அப்போது ரெஜி மட்டும் சிக்கிக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பாபு, ஜஸ்டின் ஜான், சேது(35), திலீப் என்ற மூர்த்தி(30), வெங்கடேஷ் (43), ராஜ்குமார்(33), கமல்(38) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.