ஈரோடு லாட்ஜில் சேலையால் கழுத்தை இறுக்கி பெண் கொலை
ஈரோடு லாட்ஜில் சேலையால் கழுத்தை இறுக்கி பெண் கொலை செய்யப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக அந்த பெண்ணுடன் தங்கி இருந்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு,
ஈரோடு பஸ் நிலையம் அருகில் நாச்சியப்பா 2–வது வீதியில் தனியார் லாட்ஜ் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த லாட்ஜூக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும், ஒரு பெண்ணும் வந்தனர். அவர்கள் தங்களுக்கு அறை வேண்டும் என்று லாட்ஜ் மேலாளர் சண்முகத்திடம் கேட்டனர்.
அதற்கு லாட்ஜ் மேலாளர் அந்த வாலிபரிடம் பெயர் மற்றும் முகவரி கேட்டார். அதற்கு அந்த வாலிபர் தன்னுடைய பெயர் தேவா, தந்தை பெயர் ஜெஸ்டின்குமார் என்றும், கர்நாடகா மாநிலம் பெங்களூரு மெஜஸ்டிக் கார்னர் பகுதியை சேர்ந்தவர் என்றும் கூறி உள்ளார். பின்னர் அந்த வாலிபர் லாட்ஜ் மேலாளரிடம் ரூ.750–ஐ கொடுத்துவிட்டு தன்னுடன் வந்த பெண்ணுடன் அறை எண் 162–க்கு சென்றார். அங்கு 2 பேரும் தங்கினார்கள்.
ரெயில் நிலையத்துக்கு...அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு அந்த வாலிபர் அறையை விட்டு வெளியில் வந்தார். இதைப்பார்த்த லாட்ஜ் மேலாளர் எங்கு செல்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அந்த வாலிபர் ‘நாங்கள் 2 பேரும் பெங்களூரு செல்ல வேண்டும். அதற்காக நான் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு சென்று டிக்கெட் எடுக்க போகிறேன்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
அதன்பின்னர் லாட்ஜ் மேலாளர் அந்த வாலிபர் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்தார். அப்போது அந்த அறையின் கதவு பூட்டப்படாமல் திறந்து கிடந்தது. அதனால் லாட்ஜ் மேலாளர் கதவை லேசாக நீக்கிவிட்டு உள்ளே பார்த்தபோது, அந்த பெண் அரைகுறை ஆடையுடன் படுத்து கிடந்துள்ளார்.
சேலையால் இறுக்கி கொலைஇதனால் அவர், 2 பேரும் கணவன், மனைவியாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்க்காமல் கதவை மூடிவிட்டு சென்றுவிட்டார். பின்னர் காலை 7 மணிக்கு மீண்டும் அந்த அறைக்கு சென்று பார்த்தபோதும் அந்த பெண் அரைகுறை ஆடையுடன் அப்படியே தான் கிடந்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த அவர், இதுபற்றி ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அந்த பெண் சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.
தப்பி ஓட்டம்எனவே அந்த பெண்ணுடன் இரவில் தங்கி இருந்த அந்த வாலிபர் தான் அந்த பெண்ணின் கழுத்தை சேலையால் இறுக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றிருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இறந்து கிடந்த அந்த பெண்ணின் வலது கையில் எஸ்.ஆர். என்று ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த அறையில் இருந்து அருகில் உள்ள ஷேர் ஆட்டோ பகுதி வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு வந்து பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
பார்வையிட்டார்இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாரும் கொலை நடந்த லாட்ஜூக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். மேலும் அவர் லாட்ஜில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்தார். பின்னர் போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவருடன் வந்த வாலிபர் கொடுத்த முகவரி மற்றும் பெயர் சரிதானா? அந்த வாலிபருக்கும், கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் என்ன தொடர்பு? எதற்காக அவர் அந்த பெண்ணை கொலை செய்தார்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
3 தனிப்படைகள்மேலும் கொலையாளியை விரைந்து பிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரின் மேற்பார்வையில் ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன், கிரைம் இன்ஸ்பெக்டர் முருகன், கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தனிப்படையினர் பல்வேறு இடங்களில் கொலையாளியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
லாட்ஜில் சேலையால் கழுத்தை இறுக்கி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.