மத்திய அரசிடம் தமிழக நலனை அடகு வைத்து விட்டனர்
மத்திய அரசிடம் தமிழக நலனை அடகு வைத்து விட்டனர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
சிவகாசி,
விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் திருத்தங்கலில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ.யுமான தங்கம் தென்னரசு 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–
மத்திய அரசு பட்டாசு உற்பத்திக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. விதித்துள்ளது. இந்த தொழிலை நம்பி நமது மாவட்டத்தில் மட்டும் 10 லட்சம் பேர் உள்ளனர். பட்டாசு தொழில் மட்டும் அல்லாமல் அதனை சார்ந்துள்ள பிற தொழில்களும் இந்த அதிகபட்ச வரி விதிப்பால் பாதிக்கப்படுகிறது. இந்த வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டாசு ஆலைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இந்த தொழிலில் நேரடியாக ஈடுபட்டுவந்த பட்டாசு தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள். வரியை குறைத்து இந்த தொழிலை காக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வரியை குறைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து கேட்டபோது ஜி.எஸ்.டி.கவுன்சிலில் இதுபற்றி பேசிக்கொள்ளலாம் என்கிறார். தமிழ்நாட்டில் அரசாங்கம் என்று ஒன்று இருப்பதாக தெரியவில்லை. தமிழக நலன்களை மத்திய அரசிடம் இந்த அரசாங்கம் அடகு வைத்துள்ளது. ஆளுங்கட்சி இப்போது எத்தனை கோஷ்டிகளாக இருக்கிறது என்றே தெரியவில்லை. ஆளுங்கட்சியில் உள்ள குழப்பத்தால் அரசு நிர்வாகம் முடங்கி கிடக்கிறது. ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம், தமிழக அரசு அடமானம் வைக்கப்பட்டுள்ளது.
நீட்தேர்வு குளறுபடியால் இனி தமிழ்நாட்டு மாணவர்கள் டாக்டர் ஆவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கடினமான கேள்வித் தாளும், மற்ற சில மாநில மாணவர்களுக்கு சுலபமான கேள்வித் தாள்களும் கொடுத்து இருப்பதாக பேசப்படுகிறது. இந்த குளறுபடியால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு அளித்தால் தான் ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவு பாரதீயஜனதாவுக்கு என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்துக்கு விடிவுகாலம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் திருத்தங்கல் நகர அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் முருகேசன், சிறுபான்மை பிரிவு நகர நிர்வாகி சேவியர், வார்டு செயலாளர் முருகன், கணேசன், இசக்கிமுத்து உள்பட பலர் தி.மு.க.வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் மாநில கொள்கைபரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன், மாநில வர்த்தகர்அணி துணை செயலாளர் வனராஜா, மாவட்ட அவைத்தலைவர் தங்கராஜ், சிவகாசி நகர செயலாளர் முனியாண்டி, ஒன்றிய செயலாளர்கள் விவேகன்ராஜ், தங்கராஜ், கருணாநிதிபாண்டியன், குருசாமி, அதிவீரன்பட்டி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முன்னாள் கவுன்சிலர் மாணிக்கம் செய்திருந்தார்.