பொதுமக்களின் ஒத்துழைப்போடு ஒவ்வொரு கிராமத்தையும் தன்னிறைவு பெறச்செய்ய வேண்டும்
பொதுமக்களின் ஒத்துழைப்போடு ஒவ்வொரு கிராமத்தையும் தன்னிறைவு பெறச்செய்ய வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
விருதுநகர்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சியினை கலெக்டர் சிவஞானம் தொடங்கி வைத்தார். அப்போது கிராமங்கள் தன்னிறைவு பெற்றிட பொதுமக்களோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.
விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்களுக்கு கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் தயாரித்தல் தொடர்பான திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பை கலெக்டர் சிவஞானம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:–
கிராம ஊராட்சிகளின் தேவைகளைக் கண்டறிய மக்களின் தேவைகளை அவர்களிடமே கேட்டறிந்து ஊராட்சிக்கான வளர்ச்சித் திட்டத்தை மக்கள் பங்கேற்புடன் தயாரித்து அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஊராட்சிகளை முழுமையான அளவில் வளர்ச்சி அடை ய செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களே திட்டமிடல், முடிவுகள் எடுத்தல், கண்காணித்தல் ஆய்வு செய்தல் அனைத்தும் கிராம மக்கள் முழுமையான அதிகாரத்துடன் செயல்படுத்துதல், கிராம ஊராட்சியின் சொந்த வருவாயைப் பெருக்குதல், உள்ளூர் வள ஆதாரங்கள் மற்றும் சமுதாய சொத்துக்களை பாதுகாப்பது, மக்களின் அடிப்படை தேவையான குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம், நல்வாழ்வு மற்றும் உள்கட்டமைப்பு தேவைகளை முழுமையாக கிடைக்க செய்வதாகும். பொதுவாக நம் தேவைகளை நாமே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை பொது மக்களுக்கு உருவாக்கி தன் கையே தனக்கு உதவி என்ற நிலையினை அடைய வேண்டும். இப்பயிற்சியின் மூலம் கிராமத்தில் உள்ள வளங்களை அறிந்து திட்டங்களை திட்டமிட பயிற்சி அளிக்கப்படும்.
பொது மக்களுக்கும் ஊராட்சி அலுவலர்களுக்கும் ஒரு நல்ல உறவு ஏற்பட இத்திட்டங்கள் உதவியாக இருக்கும். இந்த பயிற்சி வகுப்பை நல்ல முறையில் பயன்படுத்தி பயிற்சி மேற்கொண்டு ஒவ்வொரு கிராமத்தில் உள்ள பிரச்சினைகள், தேவைகளை கண்டறிந்து அவற்றை பட்டியலிட்டு 5 வருடங்களுக்கான திட்டங்களை தயாரித்து அவற்றிலிருந்து முன்னுரிமைபடுத்தி ஓராண்டு திட்டமாக தயார் செய்து அவற்றை ஒவ்வொரு வருடமும் முன்னுரிமை படுத்திய தேவைகளை திட்டங்களாக வகுத்து பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தி ஒவ்வொரு கிராமங்களையும் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் திலகவதி, மாவட்ட ஊராட்சி செயலர் பூங்குழலி, ஊரக வளர்ச்சி துறை டி.கல்லுப்பட்டி பயிற்சி மைய துணை இயக்குனர்கள் சுப்பிரமணியன், தயாளன் மற்றும் மாநில அளவிலான பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த பயிற்சி வகுப்பு வருகிற 4 மற்றும் 5–ந் தேதிகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பணி மேற்பார்வையாளர்களுக்கும்,, 6 மற்றும் 7–ந் தேதிகளில் அனைத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது.