உழவர்கரை தொகுதியில் துப்புரவு பணி: கவர்னர் கிரண்பெடிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. எதிர்ப்பு


உழவர்கரை தொகுதியில் துப்புரவு பணி: கவர்னர் கிரண்பெடிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. எதிர்ப்பு
x
தினத்தந்தி 2 July 2017 4:30 AM IST (Updated: 2 July 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

புதுவை உழவர்கரை தொகுதியில் துப்புரவு பணி செய்ய கவர்னர் கிரண்பெடிக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.என்ஆர். பாலன் எம்.எல்.ஏ எதிர்ப்பு தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவையில் இருக்கும் போது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு இடங்களுக்கு அதிகாரிகளுடன் சென்று கவர்னர் கிரண்பெடி ஆய்வு செய்வது வழக்கம். கடந்த இரண்டு வாரங்களாக சனிக்கிழமை அன்று துப்புரவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுடன் சைக்கிள் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை உழவர்கரை தொகுதிக்கு உட்பட்ட பிச்சவீரன்பேட் ஆசிரியர் குடியிருப்பு பகுதிக்கு சைக்கிளில் சென்றார். அப்போது அங்குள்ள காலி இடத்தில் மரங்களில் இருந்து விழும் தழைகள், கிளைகள், பூக்கள் உள்ளிட்டவை குப்பைகளாக கிடப்பதை பார்த்தார். அதனை தொடர்ந்து அங்கு துப்புரவு செய்யும் பணியில் அவர் ஈடுபட்டார். அப்போது அவருடன் கவர்னர் மாளிகை ஊழியர்கள், மாணவ–மாணவிகள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் மைதானம் முழுவதையும் சுத்தப்படுத்தினர்.

இது பற்றிய தகவல் அறிந்த உடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூய்மை பணியில் ஈடுபட்ட கவர்னரிடமும், கவர்னர் மாளிகை ஊழியர்களிடமும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது அவர்களிடம், இந்தப் பகுதியைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், நான் பதவியேற்றது முதல் இங்குள்ள இலவம்பஞ்சு மரத்தில் இருந்து விழும் பஞ்சுகளால் மக்கள் படும் அவதியை அறிந்து அந்த மரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறேன். இதுவரை 5 மரங்கள் அகற்றப்பட்டு விட்டது. தற்போது நீங்கள் இங்கு வந்து துப்புரவு பணி செய்வதாக கூறி சிறிதுநேரம் குப்பைகளை அகற்றிவிட்டு, அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் போட்டு எம்.எல்.ஏ.க்கள் வேலை செய்யவில்லை என்று குறிப்பும் எழுதுவீர்கள்? தொகுதியில் எம்.எல்.ஏ.க்கள் வேலை செய்யவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? இன்று தழைகளை அகற்றிவிட்டு சென்றவுடன், நாளை மீண்டும் தழைகள் இருக்கும். அப்போது யார் வந்து அகற்றுவார்கள்? எனக்கேட்டு கவர்னரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு இருந்த கவர்னர் மாளிகை ஊழியர்கள் எம்.என்.ஆர். பாலன் எம்.எல்.ஏ.வை சமாதானம் செய்தனர். ஆனால் கவர்னர் கிரண்பெடி ஊழியர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் துப்புரவு பணியை முடித்து விட்டு அங்கிருந்து சைக்கிளில் புறப்பட்டு கவர்னர் மாளிகைக்கு சென்றார்.

இது குறித்து எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ, கூறியதாவது:–

பிச்சைவீரன்பேட் ஆசிரியர் காலனியில் உள்ள காலி இடத்தில் 10 இலவம் பஞ்சு மரங்கள் இருந்தன. இந்த மரங்களில் இருந்து பஞ்சுகள் காற்றில் பறந்து அப்பகுதி மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்து வந்தன. இந்த மரங்களை அகற்ற வனத்துறை, தீயணைப்புத்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய மூன்று துறைகளில் அனுமதி பெற வேண்டியுள்ளது. 3 துறைகளிலும் அனுமதி பெற்று 5 மரங்களை அகற்றியுள்ளேன். மீதி 5 மரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வனத்துறை மற்றும் உள்ளாட்சித்துறைக்கு அமைச்சர் பொறுப்பு வகித்தும் இப்பணியை செய்யவில்லை. இந்த நிலையில் நான் கடந்த 6 மாதகாலமாக செய்து வரும் பணியை மறைக்கும் வகையில் கவர்னர் கிரண்பெடி ஆசிரியர் காலனிக்கு வந்து குப்பைகளை தூர்வாரும் பணியில் ஈடுபட்டார். குப்பை வாரும் பணி கவர்னர் செய்ய வேண்டியதா? அதை அகற்றிவிட்டு சமூக இணையதளத்தில் போட்டு எம்.எல்.ஏ, வேலை செய்யவில்லை என்றும் கூறுகின்றார். இதனால்தான் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். கவர்னர் மக்கள் பணிக்காக வரவில்லை. விளம்பரத்திற்காக வருகின்றார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story