ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தது: ஓசூர்-தொப்பூரில் வணிக வரி சோதனைச்சாவடிகள் மூடப்பட்டன


ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தது: ஓசூர்-தொப்பூரில் வணிக வரி சோதனைச்சாவடிகள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 2 July 2017 4:30 AM IST (Updated: 2 July 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்ததால் ஓசூர் ஜூஜூவாடி மற்றும் தொப்பூரில் செயல்பட்டு வந்த வணிக வரி சோதனைச்சாவடிகள் மூடப்பட்டன.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் ஜூஜூவாடி உள்ளது. இங்கு 2 வணிக வரி சோதனைச்சாவடிகள் செயல்பட்டு வந்தன. தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் வழியில் ஒரு சோதனைச்சாவடியும், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வழியில் ஒரு சோதனைச்சாவடியும் செயல்பட்டன.

இந்த வழியாக தினமும் வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அதே போல் தமிழகத்தில் இருந்தும் பல்வேறு மாநிலங்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் போலீசார் இந்த பகுதியில் தினமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.

மூடப்பட்டன

மேலும் வணிகவரி சோதனைச்சாவடியில் முழுமையான சோதனைக்கு பிறகே வாகனங்கள் செல்லவும், உள்ளே வரவும் அனுமதிக்கப்படும். இதன் காரணமாக இந்த பகுதியில் ஏராளமான லாரிகள் மற்றும் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நிற்கும். இதனால் இங்கு போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருக்கும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்தது. இதன் காரணமாக ஓசூர் ஜூஜூவாடி வணிகவரி சோதனைச்சாவடிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே மூடப்பட்டன. இதனால் இந்த வழியாக வரும் வாகனங்கள் எந்தவித சோதனையும் இன்றி செல்கின்றன. மேலும் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும் இந்த சாலை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

தொப்பூர்

வணிக வரித்துறை கட்டுப்பாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் தொப்பூர், வெள்ளக்கல் ஆகிய 2 இடங்களில் சோதனைச்சாவடிகள் உள்ளன. கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் இந்த சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன. இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள், லாரிகள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்ததையடுத்து 2 சோதனைச்சாவடிகளும் நேற்று முதல் மூடப்பட்டன. இதனால் எப்போதும் லாரிகள் அணிவகுத்து நிற்கும் சுங்கச்சாவடி பகுதி நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.


Related Tags :
Next Story