பரப்பன அக்ரஹாரா சிறையில் 36 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் 36 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் 36 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 2 ஆயிரத்து 300 கைதிகள் அடைக்கலாம். ஆனால், சிறையில் அளவுக்கு அதிகமாக கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அதாவது 4,400 கைதிகள் வரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில், 1,000 தண்டனை கைதிகள், 600 பெண் கைதிகளும் அடங்குவர்.இந்த நிலையில், மாநில சுகாதாரத்துறை மூலம் சிறை கைதிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் சமீபத்தில் சிறையில் உள்ள மருத்துவமனையில் நடந்தது. இந்த முகாமில் கைதிகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ பரிசோதனை முடிவில் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, சிறையில் உள்ள 36 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்து உள்ளது. 12 கைதிகள் காசநோயாலும், 60 கைதிகள் வலிப்பு நோயாலும், 142 கைதிகள் மனநோயாலும், ஏராளமான கைதிகள் இதயம் சம்பந்தப்பட்ட கோளாறாலும் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.காசநோய் பிற கைதிகளுக்கு பரவாமல் தடுக்கும் வகையில் காசநோய் பாதித்த 12 பேரும் தனிச்சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்ற தகவல் வந்து உள்ளது. நோய் பாதிப்புள்ள கைதிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதுடன், அவர்களுக்கான மருத்துவ சிகிச்சை பற்றி பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகலபுரகி மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்ட 32 வயது நிரம்பிய ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்காக அவர் கலபுரகி சிறையில் இருந்து பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாற்றப்பட்டார். இவருக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையின்போது அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம் என்பது தெரியவந்துள்ளது. தற்போது அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை விக்டோரியா ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவருக்கு விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது என சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார்.
4,400 கைதிகளுக்கு 3 டாக்டர்கள்சிறையில் இருக்கும் கைதிகள் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் சிறையின் உள்ளேயே மருத்துவமனை உள்ளது. இங்கு 3 டாக்டர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த மருத்துவமனையில் 100 படுக்கைகள் உள்ளன. இங்கு தினமும் ஏறக்குறைய 200 கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், சிறையில் 4,400 கைதிகள் இருப்பதால் அவர்களுக்கு 3 டாக்டர்கள் போதாது என கூறப்படுகிறது. மேலும், மருத்துவமனையில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கைகளையும் அதிகப்படுத்த வேண்டிய சூழல் அங்கு நிலவுவதாக சொல்லப்படுகிறது.
இதுபற்றி சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா கூறுகையில், ‘பரப்பனஅக்ரஹாரா சிறை மருத்துவமனையை விரைவில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.