விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதில் மத்திய–மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை

விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதில் மத்திய–மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை என்று குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
பெங்களூரு,
விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதில் மத்திய–மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை என்று ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
தாவணகெரே டவுனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பேசியதாவது:–
இந்த நிகழ்ச்சி தொடங்கும் முன்பு மழை வருவது போல இருந்தது. இதனால் நிகழ்ச்சியை நடத்த முடியாமல் போய்விடுமோ என்று பலர் கருதினார்கள். ஆனால் மழை வந்தால் தான் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று மேடையில் இருந்த நான் நினைத்தேன். நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டாலும் பரவாயில்லை, விவசாயிகளுக்காக மழை பெய்ய வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டேன். ஏனெனில் இந்த நிகழ்ச்சியை இன்று (அதாவது நேற்று) நடத்த முடியாமல் போனாலும், வேறு ஒரு நாளில் சிறப்பாக நடத்தி கொள்ளலாம்.கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சரியாக மழை பெய்யாததால் கடுமையான வறட்சி நிலவுகிறது. இந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்திருக்கிறார்கள். அதனால் தான் விவசாயிகள் தாங்கள் வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.
ஆனால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மாநில அரசும் விவசாய கடன்களை மத்திய அரசு தான் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறுகிறது. விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை. விவசாயிகளின் வாழ்க்கையில் மத்திய, மாநில அரசுகள் அலட்சியமாக செயல்படுகின்றன. மேலும் அவர்களது வாழ்க்கையில் மத்திய–மாநில அரசுகள் விளையாடுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.எதிர்க்கட்சிகள் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மாநில அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதன் காரணமாகவும், அடுத்த ஆண்டு (2018) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதாலும் ரூ.50 ஆயிரம் வரை விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை முதல்–மந்திரி சித்தராமையா தள்ளுபடி செய்துள்ளார். இந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட பின்பும் மாநிலத்தில் கடந்த சில நாட்களில் 15 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இன்னும் சில மாதங்கள் விவசாயிகள், மாநில மக்களும் பொறுமையாக இருங்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளை புறக்கணித்து விட்டு ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஓட்டுப்போடுங்கள். ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்த 24 மணிநேரத்தில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். முதல்–மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டு விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்வதாக கூறவில்லை. விவசாயிகள் படும் துயரங்களை போக்கவே, அவர்களது கடன்களை 24 மணிநேரத்தில் தள்ளுபடி செய்வேன் என்று கூறுகிறேன்.கடன்களை மட்டும் தள்ளுபடி செய்யாமல், அவர்கள் வறட்சி காலத்திலும் நிம்மதியாக வாழ பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவேன். கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் வேலை தேடி பெங்களூருவுக்கு வரும் நிலையை மாற்றி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழிற்சாலைகள் தொடங்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிப்பேன்.
இவ்வாறு குமாரசாமி பேசினார்.






