கோவை சவுரிபாளையத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி கடையடைப்பு போராட்டம் சாலைமறியல்

கோவை சவுரிபாளையத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. சாலை மறியல் செய்த பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை,
கோவை சவுரிபாளையம் கருணாநிதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன. கோவை நகரில் தேசிய நெடுஞ்சாலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அங்குள்ள மதுக்கடைகளுக்கு நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மது வாங்குவதற்காக ஏராளமானவர்கள் வருகிறார்கள். இதனால் சட்டம்–ஒழுங்கு உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வரு கிறது.
எனவே மதுக்கடைகளை அகற்றுவதற்காக சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் மக்கள் நல சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். மாவட்ட கலெக்டர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளிடமும் மனு அளித்தனர். அதன் முதல்கட்டமாக 2 கடைகள் 30.6.2017–க்குள் அகற்றப்படும் என்றும், மற்ற மதுக்கடைகள் அதன்பின்னர் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் அந்த 4 மதுக்கடைகளும் இன்னும் அகற்றப்பட வில்லை.
இதை கண்டித்து சவுரிபாளையம் பகுதியில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் சவுரிபாளையம் சந்திப்பு பகுதிகளில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பின்னர் சவுரிபாளையம் மக்கள் நல சங்கம் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு சவுரிபாளையம் மக்கள் நல சங்க தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ப.கந்தசாமி, பொருளாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக் குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுந்தரம் ஆகியோர் அங்கு வந்து இருந்தனர். சாலை மறியல் போராட்டத்தில் பெண்கள் உள்பட பலர் திரளாக கலந்துகொண்டனர்.
அவர்கள், கருப்பு பட்டை அணிந்தபடியும், கருப்புக்கொடியை தூக்கியபடியும் வந்து, டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்ற தாமதம் செய்வது ஏன்?, பொதுமக்கள் நலனில் அக்கறை இல்லையா?’ என்று கோஷமிட்டனர். போலீஸ் தடையை மீறி நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வடிவேல், கல்யாணசுந்தரம் நந்தகோபால், ராமமூர்த்தி, தேவராஜ், தம்புராஜ், நோயல், ஜதன்ஜோசப், பாபு, கணேசன் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் வேன்களில் ஏற்றப்பட்டு அங்குள்ள ஒரு மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்ட னர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
பொதுமக்களின் போராட்டம் காரணமாக அந்தபகுதியில் அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டு விடாமல் இருக்க போலீஸ் துணை கமிஷனர் லட்சுமி தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.






