ராட்சத அலை இழுத்துச் சென்றது: கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
எண்ணூரில் கடலில் குளித்தபோது, கல்லூரி மாணவர்கள் 3 பேரை ராட்சத அலை இழுத்து சென்றது. இதில் ஒருவர் பலியானார். மற்ற 2 மாணவர்களையும் மீனவர் ஒருவர் காப்பாற்றி கரை சேர்த்தார்.
திருவொற்றியூர்,
எண்ணூர் சுனாமி குடியிருப்பு 25–வது பிளாக்கில் வசித்து வருபவர் அருள்தாஸ். வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஆரோக்கியராஜ் (வயது 19). மீஞ்சூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்றுவிடுமுறை என்பதால் ஆரோக்கியராஜ், தனது நண்பர்களான ஆகாஷ், இலியாஸ் ஆகியோருடன் எண்ணூர் ராமகிருஷ்ணாநகர் அருகே கடலில் குளித்து விளையாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த ராட்சத அலையில் சிக்கிய 3 பேரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். அப்போது 3 பேரும் கூச்சலிட்டனர்.
மாணவர் பலிஇதைப்பார்த்த கரையில் நின்று கொண்டிருந்த காசி விசாலாட்சி குப்பம் பகுதியை சேர்ந்த மீனவர் தியாகராஜன் (25) படகில் சென்று, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆகாஷ், இலியாஸ் ஆகியோரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார்.
பின்னர் ஆரோக்கியராஜை காப்பாற்ற மீண்டும் படகில் தியாகராஜ் கடலுக்குள் சென்றார். ஆனால் அதற்குள் அவர் கடலில் மூழ்கி இறந்தார். இதையடுத்து அவரது உடலை மட்டும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். இதில் தியாகராஜிக்கு காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.