கோத்தகிரி அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


கோத்தகிரி அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 3 July 2017 4:15 AM IST (Updated: 3 July 2017 12:48 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே அரவேனு பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் இருந்த 2 டாஸ்மாக் மதுக்கடைகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மூடப்பட்டன. இதில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை கேத்தரின் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலையோரத்தில் திறக்கப்பட்டது.

மூடப்பட்ட மற்றொரு டாஸ்மாக் மதுக்கடை கோத்தகிரியில் இருந்து அரவேனு செல்லும் ஜக்கனாரை ஊராட்சிக்குட்பட்ட கட்டக்கல் என்னும் ஒதுக்குப்புறமான தேயிலைதோட்டங்களுக்கு இடையே புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் அந்த மதுக்கடை கடந்த 3 நாட்களுக்கு முன் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த மதுக்கடை திறக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் 200–க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் மதுக்கடை முன் திரண்டு முற்றுகையிட்டனர். மதுக்கடையை மூடக்கோரி கோ‌ஷமிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த கோத்தகிரி இன்ஸ்பெக்டர்கள் அருள் முருகன்(கோத்தகிரி), ஜெயமுருகன்(குன்னூர்) ஆகியோர் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் நசீர், கண்ணன், ராமமூர்த்தி, தீபன் சக்ரவர்த்தி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:–

புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை அருகே தந்தை பெரியார் மற்றும் தவிட்டுமேடு கிராம பகுதி உள்ளது. இங்கு 500–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இப்பகுதியில் பேரூராட்சியால் பொதுக்கழிப்பிடம் கட்டி கொடுக்கப்படாததால் ஒதுக்குப்புறமான இடங்களையும், சாலையோரத்தையும் தான் பொதுக்கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தோம். இப்போது அவசர, அவசரமாக தேயிலை தோட்டங்களுக்கு இடையே கட்டிடம் கட்டி மதுக்கடையை திறந்து விட்டனர். ஆனால் பல ஆண்டு காலமாக பொதுக்கழிப்பிட வசதி கேட்டு போராடியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதியில் புதிதாக கழிப்பிட வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூலி தொழிலாளர்கள் அதிக பேர் வசிக்கும் பகுதி என்பதால் வேலைக்கு செல்லாமல் மது குடித்து குடும்பத்தை வறுமையில் தள்ளி விடுவார்கள். எனவே இங்குள்ள மதுக்கடையை நிரந்தரமாக மூடும் வரை முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த நிலையில் பொதுமக்களின் முற்றுகை போராட்டத்தால் நேற்று அங்கு மதுக்கடை திறக்கப்படவில்லை. பின்னர் சுகாதார ஆய்வாளர் கண்ணன் சம்பவ இடத்துக்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்னும் 10 நாட்களில் பொதுக்கழிப்பிடம் கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். பொதுமக்களின் இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story