பூண்டி ஏரியில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி
சென்னை ஆவடியை சேர்ந்தவர் தனிகைவேல். ஆவடி டேங்க் பேக்டரியில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் அபிஷேக் (வயது 20).
ஊத்துக்கோட்டை,
இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை தன்னுடைய நண்பர்கள் 10 பேருடன் பூண்டிக்கு சென்றார்.
ஏரி தற்போது வறண்டு காணப்படுகிறது. ஒரு பகுதியில் மட்டும் மீன்வளர்ப்பு துறைக்கு சொந்தமான குட்டையில் கொஞ்சம் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அபிஷேக் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஏரியில் இறங்கி குளித்தார்.
சாவுநீச்சல் தெரியாத அபிஷேக் ஏரியில் மூழ்கி விட்டார். சக மாணவர்களால் அவரை காப்பாற்ற இயலவில்லை. இது குறித்து பென்னாலூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திருவள்ளூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் ஏரிக்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி அபிஷேக்கின் உடலை வெளியே எடுத்தனர்.
இது குறித்து பென்னாலூர்பேட்டை சப்–இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி வழக்குப்பதிவு செய்து அபிஷேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகிறார்.