பழனி அருகே இருதரப்பினர் இடையே மோதல்; போலீஸ் குவிப்பு–பதற்றம்
பழனி அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரின் குடிசைகளுக்கு தீ வைத்ததால் பதற்றம் நிலவுகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெய்க்காரப்பட்டி,
திருப்பூர் மாவட்டம் கொழுமத்தை அடுத்த எலையமுத்தூரில் இருந்து பழனியை அடுத்த ஆண்டிப்பட்டி நோக்கி நேற்று முன்தினம் அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில் பயணம் செய்த எலையமுத்தூரை சேர்ந்த 2 பேருக்கு இடையே இருக்கை பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது சக பயணிகள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத இருவரும் தங்கள் தரப்பை சேர்ந்தவர்களிடம் இது குறித்து தெரிவித்தனர். இதனால் நேற்று இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் மற்றொரு தரப்பினரை தாக்கியதுடன் அவர்களின் குடிசைகளுக்கும் தீ வைத்தனர்.
இது குறித்து பழனி தாலுகா போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். ஆனால் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் எலையமுத்தூரில் இருந்து ஆண்டிப்பட்டி செல்லும் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாதிக்கப்பட்டவர்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கட்ராமன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மோதல் பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.