ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மனசாட்சிபடி வாக்களிக்க வேண்டும்


ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மனசாட்சிபடி வாக்களிக்க வேண்டும்
x
தினத்தந்தி 3 July 2017 4:30 AM IST (Updated: 3 July 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மனசாட்சிபடி வாக்களிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன் தெரிவித்தார்.

தர்மபுரி,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இந்தியாவை மீட்போம், தமிழ்நாட்டை காப்போம் என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் பிரசார இயக்கம் நடைபெற்று வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாககுழு உறுப்பினர் மகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காரிமங்கலம், அரூர், மொரப்பூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

இந்த கூட்டங்களில் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நஞ்சப்பன், மாநில நிர்வாககுழு உறுப்பினர்கள் இந்திரஜித், லகுமையா, சாமிக்கண்ணு, மாவட்ட செயலாளர்கள் ராமச்சந்திரன், தேவராஜன், ஜோதி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனிடையே இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன் தர்மபுரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஜனாதிபதி தேர்தல்

ஜி.எஸ்.டி. வரி என்பது பன்னாட்டு முதலாளிகள் ஆதாயம் பெறவே கடலை மிட்டாய்க்கு எல்லாம் வரி விதிக்கப்பட்டது. இந்தியாவை பன்னாட்டு முதலாளிகளிடம் விற்றுவிட மோடி முயற்சி செய்கிறார். ஜி.எஸ்.டி. வரியால் இந்தியாவில் உள்ள சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படும் சூழ்நிலை உருவாகும். அனைத்து தொழிலுக்கும் முதன்மையான விவசாயம் வேரோடு அழிந்து விடும். ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை எப்படி பாதுகாப்பது என்பது பற்றி தான் அ.தி.மு.க.வினர் கவலைப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். மக்களை பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை.

காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மனசாட்சிபடி மீராகுமாருக்கு வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் சமூக நீதிக்காக போராடிய பெரியார், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்வதாகவே இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story