முக்கிய பிரமுகர்களிடம் பணம் கேட்டு மிரட்டல்: பிரபல ரவுடிகளின் பட்டியல் சேகரிப்பு


முக்கிய பிரமுகர்களிடம் பணம் கேட்டு மிரட்டல்: பிரபல ரவுடிகளின் பட்டியல் சேகரிப்பு
x
தினத்தந்தி 3 July 2017 4:30 AM IST (Updated: 3 July 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் முக்கிய பிரமுகர்களை பணம் கேட்டு மிரட்டிய ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ரவுடிகளின் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகளவில் இருந்து வந்தது. பணம் கேட்டு மிரட்டுதல், கடத்துதல், ஆட்களை கொலை செய்தல் போன்றவை தொடர்ந்து நடந்து வந்தன. போலீசாரின் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக ரவுடிகளின் அட்டகாசம் முடிவுக்கு வந்தது.

ஓசூரில் முக்கிய பிரமுகரை கொலை செய்த வழக்கில், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடி ஒருவர், தனது கூட்டாளிகளின் உதவியுடன் ஓசூரில் உள்ள முக்கிய பிரமுகர்களை இரவு நேரத்தில் சந்தித்து, தனக்கு ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டினார். இரவு நேரத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு தனது கூட்டாளிகளுடன் அந்த ரவுடி நகரில் சுற்றியது குறித்தும், பிரமுகர்களை பணம் கேட்டு மிரட்டியது பற்றியும் நேற்றைய “தினத்தந்தி”யில் செய்தி வெளியானது.

கடும் நடவடிக்கை

இந்த நிலையில் ஓசூரில் ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின் பேரில் ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் தலைமையில், போலீசார் ரவுடிகளை கண்காணிக்கும் பணியை தொடங்கி உள்ளனர். இதில் முதல் கட்டமாக ஓசூர் டவுன், அட்கோ, மத்திகிரி, சிப்காட் ஆகிய நகர போலீஸ் நிலையங்களில் உள்ள பிரபல ரவுடிகளின் பட்டியலை எடுத்துள்ளனர்.

அந்த ரவுடிகளின் தற்போதைய நிலை என்ன? என்ற விவரங்களை சேகரித்து வருகிறார்கள். இதில் சில ரவுடிகள் அடியாட்களை வைத்து கொண்டு பெட்ரோல் பங்க் உரிமையாளர் உள்பட சிலரை மிரட்டி பணம் கேட்பதாக கூறப்படுகிறது. அவர்களின் விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

போலீசார் அறிவுரை

இதற்கிடையே ஓசூர் நகரின் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் போலீசார் பங்கேற்ற கூட்டம் நேற்று நடந்தது. இதில் பேசிய போலீசார், குடியிருப்பு பகுதிகளில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நபர்கள் சுற்றினால் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். ரவுடிகள் யாரேனும் மிரட்டினாலோ, பணம் கேட்டாலோ உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் முக்கிய இடங்களில் கட்டாயம் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்திட வேண்டும் என தெரிவித்தனர்.


Related Tags :
Next Story