தஞ்சை மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் பணி தேர்வை 7,873 பேர் எழுதினர்


தஞ்சை மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் பணி தேர்வை 7,873 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 3 July 2017 4:15 AM IST (Updated: 3 July 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் பணி தேர்வை 7,873 பேர் எழுதினர்.

தஞ்சாவூர்,

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. தஞ்சை மாவட்டத்தில் 25 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதுவதற்காக 8,769 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் இவர்களில் 896 பேர் தேர்வு எழுத வரவில்லை. 7,873 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 136 மாற்றுத்திறனாளிகளும், 8 கண்பார்வையற்றவர்களும் தேர்வு எழுதினர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக தரைதளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கண்பார்வையற்றவர்களுக்கு கூடுதலாக 1 மணிநேரம் ஒதுக்கப்பட்டு, அவர்கள் சொல்வதை எழுதுவதற்காக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

தேர்வு எழுத மையத்திற்கு வந்தவர்களை போலீசார், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், என்.எஸ்.எஸ்., என்.சி.சி. அலுவலர்கள் சோதனை செய்தனர். தேர்வு அறைக்குள் நுழைவுச்சீட்டு மற்றும் பேனா மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், மணிபர்ஸ், கால்குலேட்டர் ஆகியவை எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை.

கலெக்டர் ஆய்வு

காலை 9.30 மணிக்கு மேல் வந்தவர்கள் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தஞ்சை மேரீஸ்கார்னர் பகுதியில் உள்ள தூய இருதய பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சுபாஷினி, மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி ரெங்கநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக கைக்குழந்தைகளுடன் நிறைய பெண்கள் தேர்வு எழுத வந்திருந்தனர். அந்த குழந்தைகளை மரங்களில் சேலையால் தொட்டில் கட்டி தூங்க வைத்துவிட்டு தேர்வு எழுத சென்றனர். அந்த குழந்தைகளின் பாதுகாப்பிற்காக கணவர் அல்லது உறவினர்கள் தேர்வு மையத்திற்கு வெளியே மரத்தடியில் அமர்ந்து இருந்தனர்.

1 More update

Related Tags :
Next Story