சரக்கு, சேவை வரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் வைகோ வலியுறுத்தல்


சரக்கு, சேவை வரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் வைகோ வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 July 2017 4:00 AM IST (Updated: 3 July 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களை பாதிக்கும் சரக்கு, சேவை வரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.

செங்கோட்டை,


நெல்லை மாவட்டம் செங்கோட்டை நகர ம.தி.மு.க. செயலாளர் சங்கரநாராயணன் என்பவர் மரணம் அடைந்தார். அவரது குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று செங்கோட்டைக்கு வந்தார். சங்கரநாராயணன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதன்பிறகு வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்திய அரசு, ஜி.எஸ்.டி. எனும் சரக்கு, சேவை வரியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வரியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கையால் செய்யப்படும் தீப்பெட்டி தொழிலுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டு உள்ளது. இது தீப்பெட்டி தொழில் செய்யும் தொழிலாளர்களை கடுமையாக பாதித்துள்ளது. இதேபோன்று பட்டாசு தொழிலும் நசுக்கப்பட்டு உள்ளது. இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள 5 லட்சம் தொழிலாளர்கள் பிழைப்புக்கு எங்கே செல்வார்கள் என்று தெரியவில்லை.

திரும்ப பெற வேண்டும்


ஜி.எஸ்.டி. அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு. சரியான கட்டமைப்பு இல்லாமல் இந்த வரி விதிப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் பேசிய பிரதமர், ஜி.எஸ்.டி. தொடக்கத்தில் அச்சத்தை உருவாக்கினாலும் வரும் காலங்களில் நன்மை தரக்கூடியது என்று கூறுகிறார். இதன் மூலம் ஜி.எஸ்.டி. வரியால் அச்சம் இருப்பது உண்மை என்பதை அவர் நிரூபித்து இருக்கிறார். ஒரே நாடு, ஒரே வரி என்று கூறும் மத்திய அரசு பின்னாளில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்று கூறும் நிலை வரக்கூடும். அது இந்தியாவின் பன்முக தன்மையை சிதைத்து விடும். இதனால் இந்தியா ஒரே நாடாக இருக்குமா? என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு வைகோ கூறினார்.

1 More update

Related Tags :
Next Story