முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு: மாவட்டத்தில் 10,760 பேர் எழுதினர்


முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு: மாவட்டத்தில் 10,760 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 3 July 2017 3:16 AM IST (Updated: 3 July 2017 3:16 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வை 10,760 பேர் எழுதினர்.

சேலம்,

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகத்தில் நேற்று நடைபெற்றது. அதன்படி சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வு 31 மையங்களில் நடந்தது. மாவட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுதுவதற்காக 11 ஆயிரத்து 592 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

ஆனால் நேற்று நடந்த எழுத்து தேர்வை 10 ஆயிரத்து 760 பேர் எழுதினர். இவர்களில் 25 பார்வையிற்றோர் உள்பட 171 மாற்றுத்திறனாளிகள் அடங்குவர். 832 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வர்கள் நுழைவு சீட்டுடன் காலை 8.30 மணிக்கு முன்னதாக மையத்திற்கு வந்தனர்.

கலெக்டர் பார்வையிட்டார்

அங்கு தேர்வர்கள் அனைவரும் சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் பேனாவை தவிர மற்ற எந்த பொருட்களையும் அறைக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் கர்சீப், வாட்டர் பாட்டில், பெல்ட், மணிப்பர்சு உள்ளிட்ட பொருட்களும் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

சேலம் மரவனேரியில் உள்ள செயின்ட் பால்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடந்த எழுத்து தேர்வை மாவட்ட கலெக்டர் சம்பத், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி ஆகியோர் பார்வையிட்டனர். இதுதவிர பள்ளிக் கல்வித்துறை துணை இயக்குனர் துரைசாமி சேலம் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களை பார்வையிட்டார். தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும்படை அமைக்கப்பட்டிருந்தன. மேலும் தேர்வு மையங்களை அறை கண்காணிப்பாளர்களும், வருவாய்த்துறை அதிகாரிகளும் கண்காணித்தனர். இந்த தேர்வையொட்டி மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறும் போது, ‘‘முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு வினாத்தாள்கள் இன்று (நேற்று) காலை சேலத்தில் இருந்து ஆயுதம் தாங்கிய போலீசார் உதவியுடன் மாவட்டத்தில் உள்ள 31 தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் தேர்வு முடிந்ததும் விடைத்தாளின் பிரதிகள் சேகரிக்கப்பட்டு இரவு போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது‘ என்றார்.


Next Story