மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு இளம்பெண்ணிடம் தீவிர விசாரணை;

மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்கப்பட்டது. குழந்தையை கடத்திய இளம்பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேட்டூர்,
சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் பவித்ரா (வயது 23) என்ற பெண் பிரசவத்துக்காக அனுமதிப்பட்டு இருந்தார். இவர் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன்மலை பகுதியைச் சேர்ந்த மல்லிகார்ஜூன் என்பவருடைய மனைவி ஆவார். திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்கு பின்னர் கர்ப்பமாக இருந்த பவித்ராவுக்கு கடந்த 22–ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை பவித்ரா மற்றும் குடும்பத்தினர் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்தநிலையில் கடந்த 29–ந்தேதி மதியம் குழந்தையை டாக்டரிடம் கொண்டு போய் காண்பிப்பதற்காக பவித்ராவின் தாயார் சசிகலா புறப்பட்டார். அப்போது 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சசிகலாவிடம் வந்து தானும் டாக்டரிடம் வருவதாக கூறினார். இதனால் குழந்தையை அந்த இளம்பெண்ணிடம் சசிகலா கொடுத்தார். அப்போது அந்த பெண்ணிடம் சசிகலா நீங்கள் யார்? ஏன் இங்கு வந்துள்ளீர்கள்? என்று கேட்டு உள்ளார். அதற்கு அந்த இளம்பெண் தன்னுடைய உறவினருக்கு குழந்தை பிறந்து உள்ளது, எனவே ஆஸ்பத்திரி வளாகத்திலேயே தங்கி இருப்பதாக பதில் அளித்து உள்ளார்.
இதனை நம்பிய சசிகலா, அந்த இளம்பெண்ணுடன் பழகினார். அன்றைய தினமே சசிகலாவை ஏமாற்றி விட்டு குழந்தையை அந்த இளம்பெண் கடத்திச் சென்றார். இதை அறிந்த பவித்ரா, சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கண்காணிப்பு கேமராவில் சிக்கிய உருவம்இதுகுறித்து மேட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். குழந்தையை கடத்திச்சென்ற பெண் குறித்து விசாரித்தனர்.
பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் அந்த இளம்பெண்ணின் உருவம் பதிவாகி இருந்தது. இதைக்கொண்டு போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
குழந்தையை கடத்திய இளம்பெண்ணை பிடிக்க மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தினகரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், பவித்ராவின் சொந்த ஊரான மாதேஸ்வரன்மலைக்கு விசாரணை நடத்துவதற்காக சென்றனர்.
புகைப்படத்தை வெளியிட்டனர்குழந்தையை கடத்திய இளம்பெண்ணை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த, குழந்தையை கடத்திய இளம்பெண்ணின் புகைப்படத்தை போலீசார் நேற்று வெளியிட்டனர். அந்த படத்தில், கையில் குழந்தையை வைத்துக் கொண்டு அந்த இளம்பெண் நடந்து செல்வது போல் உள்ளது.
இதுகுறித்து போலீசார் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், படத்தில் கண்ட பெண் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்து 7 நாட்களான பெண் குழந்தையை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து மேட்டூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தகவல் தெரிவிக்க வேண்டிய செல்போன் எண்களையும் குறிப்பிட்டு உள்ளனர்.
தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி குழந்தையை கடத்திய இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.






