மொழிகளின் தாய், தமிழ்மொழி!


மொழிகளின் தாய், தமிழ்மொழி!
x
தினத்தந்தி 3 July 2017 11:53 AM IST (Updated: 3 July 2017 11:59 AM IST)
t-max-icont-min-icon

தமிழர்களின் தாய்மொழி தமிழ். இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்ட தமிழ், பல மொழிகளின் தாய் மொழியாகவும், உலகின் மூத்த மொழியாகவும் விளங்குகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ்மொழியின் சிறப்புகளை பார்ப்போம்..!

* இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ்மொழி, தற்போது வழக்கில் இருக்கும் செம்மொழிகளில் ஒன்றாகும். அகழ் வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்களில் உள்ள எழுத்துக்கள் கி.மு. 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவை என்று வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன.

* உலகில் முதல் முதலாக தோன்றிய மொழி, தமிழ்மொழியே என்பது பல்வேறு மொழியியல் அறிஞர்கள் கூற்றாகும். அதனால் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ் என்று கூறுவது உண்டு. தமிழ்மொழி தனித்தியங்கும் சிறப்புடையது என்ப தால் பலமொழி கலப்பிற்கு பின்பும் அழிவின்றி தனிச்சிறப்புடன் திகழ்கின்றது. தொல்காப்பியம், நன்னூல் முதலான இலக்கண நூல்களின் மூலம் சிறந்த மொழி வரையறைகளைத் தமிழ் கொண்டுள்ளது.

* செந்தமிழ், கொடுந்தமிழ், முத்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், இயற்றமிழ், தனித்தமிழ், நற்றமிழ், ஆட்சித்தமிழ், அறிவியல் தமிழ், கொங்கு தமிழ் என பல பரிமாணங்களில் தமிழ்மொழி சிறப்பு பெற்று விளங்குகிறது.

* தெலுங்கு, கன்னடம் முதலான திராவிட மொழிகளின் படைப்புகள் பழமையானவையாக இருந்தாலும், இலக்கண இலக்கிய வரி வடிவில் சிறப்புற அமைந்த இலக்கியங்கள் தமிழில் மட்டுமே காணக்கிடைக்கின்றன.

* தற்காலத்தில் எழுதுவதற்கும், மேடையில் பேசுவதற்கும் செந்தமிழே பொதுவாகப் பயன் படுத்தப்படுகின்றது. ஏனைய திராவிட மொழிகளில் பேச்சு வழக்கிற்கும், எழுத்து வழக்கிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக் காணும்பொழுது, தமிழ் மொழிக்கும் இவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் குறைவு எனலாம்.

* ஆறாம் நூற்றாண்டில் இருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் “வட்டெழுத்து” முறை உருவானது. அது ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது. ஒரே பொருளைக் குறிக்கும் பல்வேறு சொற்களைக் கொண்ட சொல்வளம் பிற திராவிட மொழிகளைக் காட்டிலும் தமிழிற்கே உண்டு.

* பழங்காலக் கல்வெட்டுக் களில் அதிகம் இடம்பெற்றுள்ள மொழி தமிழே. வடமொழி உள்ளிட்ட பிற மொழி கல்வெட்டுகள் மிகச்சிலவே காணப்படுகின்றன. இன்னும் சொல்லப் போனால் சில கல்வெட்டுக்களில் உள்ள தமிழ்நடை, கல்வெட்டுத் தமிழ் எனக் கொண்டாடிக் கொள்ளக்கூடிய அளவில் தனித்தன்மை உடையதாய் உள்ளன.

* உலகத்தின் எம்மொழியாயினும், ஈடுகொடுத்து நிற்க இயலாக அளவிற்குப் பிறமொழிப் படையெடுப்புகளைத் தாண்டி, தமிழ்மொழி சிறந்து விளங்குகின்றது. அத்தோடு, மேலும் மேலும் புதுப்புது இலக்கியங்களையும் படைத்துக் கொண்டு புத்தாக்கம் பெற்று மிளிர்ந்து கொண்டிருக்கின்றது.

* “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற மொழிக்கு ஏற்ப தமிழ் பேசுவோம். தமிழனாகவே வாழ்வோம்.
வாழ்க தமிழ்.. வளர்க தமிழ்..!

Next Story