கந்துவட்டி கொடுமையை கண்டித்து தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
திருப்பத்தூர் அருகே உள்ள உடையாமுத்தூர் ஜங்கமாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52), தொழிலாளி.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே உள்ள உடையாமுத்தூர் ஜங்கமாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52), தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த மணி (45) என்பவரிடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1¾ லட்சம் வட்டிக்கு வாங்கியிருந்தார். பின்னர் ரூ.1 லட்சத்தை ஆறுமுகம், மணியிடம் கொடுத்ததாகவும், ஆனால் மணி கந்துவட்டி போட்டு ரூ.7 லட்சம் தர வேண்டும் என ஆறுமுகத்தை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆறுமுகம் திருப்பத்தூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஆறுமுகம் நேற்று தனது மனைவி சித்ரா மற்றும் மகன்களுடன் திருப்பத்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த அலுவலக ஊழியர்கள் ஆறுமுகத்திடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து ஆறுமுகம், உதவி கலெக்டர் கார்த்திகேயனிடம் மனு ஒன்றை அளித்தார். மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உதவி கலெக்டர் உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து ஆறுமுகம் தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து சென்றார்.