விழுப்புரம்– கடலூர் மாவட்டங்களில் சாலை விபத்துகளை தடுத்து விபத்தில்லா சரகமாக மாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்
விழுப்புரம்– கடலூர் மாவட்டங்களில் சாலை விபத்துகளை தடுத்து விபத்தில்லா சரகமாக மாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற டி.ஐ.ஜி. கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த அனிஷாஉசேன் சென்னை நகர இணை கமிஷனராக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை மைலாப்பூர் துணை கமிஷனராக பணியாற்றி வந்த வி.பாலகிருஷ்ணன் பதவி உயர்வு பெற்று விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.
இவர் நேற்று காலை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக்கொண்டார். விழுப்புரம் சரகத்தில் 23–வது டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்ற வி.பாலகிருஷ்ணன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
விழுப்புரம் சரகத்திற்குட்பட்ட விழுப்புரம், கடலூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் மக்கள் தொடர்பாக இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க அதிகாரிகளுடன் ஆலோசித்து சட்டப்பூர்வமாக தகுந்த நடவடிக்கை எடுக்க ஆவண செய்வேன். அதே நேரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கென்று ஒரு சில தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கிறது. அந்த பிரச்சினைகள் என்னவென்று அறிந்து அதனை தீர்ப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் முறையாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு டி.ஐ.ஜி. என்ற முறையில் உறுதுணையாக செயல்படுவேன்.
விழுப்புரம்– கடலூர் மாவட்டங்களில் சட்டம்– ஒழுங்கு பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்தப்படும். சட்டம்– ஒழுங்கு பிரச்சினை வரும் முன்பே அதனை கண்டறிந்து பிரச்சினை ஏற்படாமல் தடுக்க தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.
இந்த 2 மாவட்டங்களும் தேசிய நெடுஞ்சாலைகள் அதிக தூரம் கொண்ட மாவட்டங்கள் என்பதால் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கிறது. இதற்கு முன்னுரிமை கொடுத்து விபத்துகளை தடுக்க மக்கள் உதவியுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஊக்கமளித்து உயிர்பலி ஏற்படுவதையும், காயம் அடைவதையும் தடுத்து விபத்தில்லா சரகமாக விழுப்புரம் போலீஸ் சரகத்தை மாற்ற மாவட்ட நிர்வாகம் மூலமும், காவல்துறை மூலமும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
அதேபோல் ரவுடியிசம் முற்றிலும் ஒழிக்கப்படும். குறிப்பாக புதுச்சேரியை சேர்ந்த கூலிப்படை ஊடுருவலை தடுக்க அந்த மாநில போலீசாரின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்த ஆண்டுகளில் எந்தெந்த பகுதிகளில் கொலை குற்றங்கள் நடந்துள்ளது, அந்த சம்பவங்களில் யார், யாரெல்லாம் ஈடுபட்டுள்ளனர் என்பதை கண்டறிந்து மேற்கொண்டு தொடர் நடவடிக்கை எடுக்கும் வகையில் அந்த குற்றவாளிகள் யாரேனும் தற்போது வெளியில் இருந்தால் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகள் மற்றும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் ஒரு இடத்தில் குற்றம் செய்துவிட்டு மற்றொரு இடத்திற்கு தப்பிச்செல்வது இனி முடியாது. குற்றவாளிகளை தப்பிக்க கண்டிப்பாக விட மாட்டோம்.
மேலும் மணல் கொள்ளை, கஞ்சா விற்பனை கட்டுப்படுத்தப்படும். அதேபோல் எந்தெந்த பகுதிகளில் நகை பறிப்பு, திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறதோ அந்த இடங்களை கண்காணித்து குற்ற சம்பவங்களை தடுக்க 24 மணி நேரமும் போலீஸ் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்படும். அதோடு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை உடனுக்குடன் கைது செய்து நீதிமன்றம் மூலம் தண்டனை கிடைக்கவும் வழிவகை செய்யப்படும்.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்க முக்கிய இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை தவிர இன்னும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிதாக பொறுப்பேற்ற டி.ஐ.ஜி. வி.பாலகிருஷ்ணனின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் என்ற கிராமமாகும். எம்.எஸ்.சி. விவசாய படிப்பு படித்துள்ள இவர் 2003–ல் இந்திய காவல் பணித்தேர்வில் வெற்றி பெற்று உதவி போலீஸ் சூப்பிரண்டாக காவல்துறையில் பணியில் சேர்ந்தார். திருப்பூர், ராணிப்பேட்டையில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர் 2007–ல் பதவி உயர்வு பெற்று திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். தொடர்ந்து, மதுரை, தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி பின்னர் 2014 முதல் சென்னை மயிலாப்பூரில் துணை கமிஷனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டியின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக டி.ஐ.ஜி. வி.பாலகிருஷ்ணனுக்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், போலீஸ் சூப்பிரண்டுகள் விழுப்புரம் ஜெயக்குமார், கடலூர் விஜயகுமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அனுசுயா டெய்சி எர்னஸ்ட், ராஜராஜன், நிஷா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.