மேகமலையில் மரங்கள் வெட்டப்பட்டதை கண்டித்து இந்து எழுச்சி முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மேகமலையில் மரங்கள் வெட்டப்பட்டதை கண்டித்து இந்து எழுச்சி முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் மரக்கன்றுகளுடன் கலெக்டரிடம் மனு
தேனி,
தேனி மாவட்டம், மேகமலை வனச்சரகத்தில் நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டி சாலை அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட இந்த பணியால் அப்பகுதிகளில் இயற்கை வளம் பறிபோய் உள்ளது. வனப்பகுதியில் மரங்கள் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து இந்து எழுச்சி முன்னணி அமைப்பினர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் மரக்கன்றுகளை கொண்டு வந்து இருந்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மேகமலையில் மரங்கள் வெட்டப்பட்டதை கண்டித்தும், கம்பம்மெட்டு எல்லைப் பகுதியில் கேரள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் மரக்கன்றுகளுடன் சென்று மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, வனப்பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டதால் சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், மரங்கள் வெட்டப்பட்ட இடங்களில் புதிய மரக்கன்றுகளை நடவு செய்து வனத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறி கலெக்டரிடம் மரக்கன்றுகளை வழங்கினர். அந்த கன்றுகளை பெற்றுக் கொண்ட கலெக்டர், உடனே வனத்துறை அலுவலர்களை அழைத்து அந்த மரக்கன்றுகளை ஒப்படைத்தார்.
கூட்டம் முடிந்த பிறகு வனத்துறையினர் அந்த மரக்கன்றுகளை தங்களின் வாகனத்தில் ஏற்றி மாவட்ட வன அலுவலர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.